Sunday, December 25, 2011

Sanatana Dharma - Thought for the day (22.12.2011) Part 2

ஹரி ஓம் ! மரியாதைக்கு உரிய அன்பு நண்பர்களே,  
 
கடந்த ஐந்து மாதங்களாக நாம் சநாதன தர்மத்தின் அடிப்படை பற்றியும் அந்த தர்மத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் பார்த்தோம். அது தவிர பல் வேறு விதமான கர்மாக்களும் சடங்குகளும் எதற்காக செய்யப் படுகின்றன என்றும் பார்த்தோம். நாம் தினமும் உட்கொள்ளும் பல்வேறு விதமான உணவு வகைகளும் அதனுடைய ஆன்மிக சம்பந்தம் பற்றியும் அறிந்தோம். இதை வெறும் படித்துணர்தவர்கள் சொல்லவில்லை. பழுத்த ஞானிகளின் மூலம் அறிந்தோம்.  
 
இந்த அடிப்படை அறிவு மிக முக்கியமானது. ஆனால் ,மேற்கூறியபடி, இது வரை நாம் பார்த்தது வெறும் மேலோட்டம் தான். இனி நாம் அந்த மஹா ஞானிகளின் துணையோடு நமது தர்மத்தின் மூலத்தையும் அதன் சிறப்புமிக்க சில விசேஷங்களையும் பார்க்கப் போகிறோம். எதையுமே நுனிப் புல் மேயாமல் அல்லது இல்லவே இல்லை என்று மறுக்காமல் ஒவ்வொரு விஷயத்தையும் அதன் ஆழத்தில் சென்று தீர்மானம் பண்ணுவது தான் சனாதன தர்மத்தின், அதன் ஞானிகளின் சிறப்பு.  
 
இனி நாம் வாரம் ஒரு முறை சநாதன தர்மத்தின் சில முக்கியமான அம்சங்களைப் பார்க்கலாம்.  
நாம் இனி பார்க்கப் போவது:  
 
1 . பக்தி - ஸ்வாமி என்றால் என்ன? இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம், கர்மமும் பக்தியும், உருவமும் அருவமும், மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும், ஆலய வழிபாடு முதலியன.  
 
2. மதம் என்றால் என்ன? எதற்கு மதம் வேண்டும் ?  
 
3. பாப புண்ணியங்கள். பாப புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ள அல்ல கழுவிக் கொள்ள வழிகள்.  
 
4 . வைதீக அல்லது வேத மதம் என்றால் என்ன? அதனுடைய பாகுபாடு, வர்ண தர்மம், சமயமும் சமூகமும், வேற்றுமையில் ஒற்றுமை முதலியன.  
 
5 . பொதுவான தர்மங்கள், விசேஷ தர்மங்கள், பண்பாடு, பரோபகாரம் - இது மிக மிக முக்கியமானதாகும். நமது தர்மத்தில் பரோபகராத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை, வெறுமனே பூஜை, வரட்டு சாஸ்திரம், கர்மாநுஷ்டானம் என்று நம்மிலேயே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு தவறு என்று நமது தர்ம சாஸ்திரங்களை பார்த்தால் புரியும். மனிதம் மட்டுமே வாழ தகுதி உடையவன் இறைவன் படைத்த மற்ற ஜீவ ராசிகளை பற்றியக் கவலை கூட சில மதங்கள் கவலைப் படுவதில்லை. அதை எல்லாம் பார்க்கும் பொது இந்த தர்மத்தின் மேல் மிக மிக மேலான மதிப்பும் பிடிப்பும் ஏற்படுகிறது.  
 
சத்தியம், அஹிம்சை, அன்பு, கருணை, காம குரோதத்தை கை விடுதல், சுயநலமில்லாத பரோபகாரம், உலகின் மீதும் பொருட்களின் மீதும் பற்றை விடுதல், ஜீவன் இருக்கும் போதே முக்தி நிலை போன்ற மிகப் பெரிய தத்துவங்களை உலகில் உள்ள சில மதங்கள் சொன்னாலும் அவை அனைத்தையும் அதை அம்மதங்கள் காரிய ரூபமாக்கித் தரவில்லை. மேற்குரிய அனைத்தையும் எவ்வாறு அப்பியசிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை. அதே போல் மற்ற மதங்கள் என்று வரும் போது அவை ஒன்றிரண்டு மகான்களோடு முடிந்து விடுகிறது. தொடர் சங்கிலி போல் அம்மதங்களின் கருத்துக்களை விளக்க வழி வழியாக மஹான்கள் தோன்றவில்லை. இதனால் அம் மதங்களின் கோட்பாடுகள் நன்றாக இருந்தாலும் அவை சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் காலப் போக்கில் பாதை மாறிப் போகின்றன. இதை நம் காலத்திலேயே பிரத்யக்ஷமாகப் பார்க்கிறோம்.  
 
இந்த உன்னதமான தர்மத்திலோ நமது தர்ம சாஸ்திரங்கள் இவை எப்படி காரிய ரூபமாக செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குவதோடு மட்டுமில்லாமல் பல ரிஷிகள், மஹான்கள் நம் போன்ற மக்களுக்கு அது எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று யுகங்கள் தோறும் தோன்றி இன்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 



இந்த மாதிரி விஷயங்களை வெறுமே படித்துணர்ந்தால் மட்டுமே போதாது. அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகி விடும். தீர்க்க தரிசனத்தாலும், த்ரி காலமும் உணர்ந்த ஸ்ரேஷ்டமான ஞானிகளால் மட்டுமே இம்மாதிரியான விஷயங்களின் ஆழத்திற்கு சென்று நம் போன்ற சாமானியர்களுக்கு விளக்க முடியும். தலைமுறை தலைமுறையாக இந்த பாரத புண்ணிய பூமியில் பல மஹான்கள் இறைவனின் அவதாரமாக தோன்றி இருக்கிறார்கள். எப்போதெல்லாம் தர்மம் நலியுமோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்று பகவான் கீதையில் கூறிய வாக்குப் படி இன்றும் எண்ணற்ற மஹான்கள் நம்மிடையே மனித உருவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மஹா உன்னதமான மகான் நம் கூடவே 100 வருடங்கள் மனித உருவிலே வாழ்ந்து நமக்கு வழி காட்டினார். கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் மஹாபெரியவரைப் பற்றி சொல்லி மாளாது. அவர் பல நூறு வருடங்களோ அல்லது பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தியோ வாழ்ந்த மஹான் அல்ல. நம்முடன் மனித உருவில் வாழ்ந்த சம காலத்தவர். அவரை அறிந்து அவரின் அருளும், ஆசீர்வாதமும் பெற்ற ஆயிரக் கணக்கானோர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் அந்த நடமாடும் தெய்வத்துடன் நடந்த சம்பவங்களை மயிர்க் கூச்செறிய, மெய் சிலிர்க்க, ஆனந்தக் கண்ணீருடன் சொல்கிறார்கள்.

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சுப்பிரமணியம் ஸ்வாமி, பால் ப்ருண்டன், ராபர்ட் வால்செர், தலாய் லாமா, ர. வெங்கடராமன், நேபால் ராஜா ராணி, கிரீசின் ராணி, MS சுப்புலக்ஷ்மி, அடல் பிஹாரி வாஜ்பாய், பல இஸ்லாமிய பிரமுகர்கள் போன்ற எண்ணற்ற தலைவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும் அவர் செய்த அற்புதங்களும், அருளும் கணக்கில் அடங்காது.

பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மை அடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத் துரத்துபவர்கள். அவர்கள் செய்த தவமும், செய்து கொண்டிருக்கிற பேரருளும், பேணிக் காக்கும் பேரருளும் எண்ணற்ற பக்தர்களின் வாயிலாக வெளி வந்திருக்கிறது. அப்படிப் பட்ட அருள் துளிகளில் சிலவற்றை நாம் பாப்போம். அவரை ஏன் எல்லோரும் (அவரைத் அறிந்த பிற மதத்தவர் உட்பட) ‘பரமாச்சாரியார்’, ‘மஹா பெரியவர்’, 'நடமாடும் தெய்வம்' என்று அழைத்தார்கள் என்று புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அவரைப் பற்றிய சில அனுபவங்களை இன்னொரு கார்டூன் பகுதியில் வாரம் தோறும் பதிவு செய்கிறேன்.

அனனவருக்கும் அந்த மஹானின் கருணையும், காருண்யமும், அருளும், அனுக்கிரஹமும் கிட்டட்டும். லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து !
ஸ்வாமி  
----------------  
 
ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இன்ன இஞ்சினியர் கட்டினார் என அறிகிறோம். ஒரு வண்டியைப் பார்த்தால் அதைச் செய்த ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். விசாரித்துப் பார்த்தால் இன்ன தச்சன் செய்தான் என்று அறிகிறோம். ஒரு வீடு அல்லது ஒரு வண்டி என்றால் அதில் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று இசைவாக சேர்ந்து அமைந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட பிரயோஜனத்தை உத்தேசித்து அவை இவ்வாறு உருவாக்கியிருப்பது தெரிகிறது. எனவே, இந்த வீடு, இந்த வண்டி ஏதோ தானாகவே அகஸ்மாத்தாக (accidental) ஆக உண்டாகிவிடவில்லை. இதை உச்சத்தோடு ஒர் அறிவே செய்திருக்கிறது. என்று ஊகிக்கிறோம். ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுப் பல வஸ்துக்களைப் சேர்த்து உண்டாக்கியிருக்கிற எதைப் பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.  
 
அப்படியானால் எத்தனையோ ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தைச் செய்தவனாக ஒருவன் இருக்கதானே வேண்டும்? எத்தனையோ வேறு விதமான வஸ்துக்களைப் பலவிதங்களில் சேர்த்து வைத்து, பலவிதமான பிரயோஜனங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிற இயற்கையை, லோக வாழ்க்கையைப் பார்க்கிறபோது, இவைகளை எல்லாம் இந்த உத்தேசத்திற்காகவே உண்டாக்கி, இவற்றை நடத்தி வருகிற ஒரு மகா பெரிய சக்தி இருக்கத்தான் வேண்டும் என்று தெரிகிறது.  
 
நாம் உட்கார்ந்திருக்கும் இந்தக் கொட்டகையை யார் போட்டார்கள் என்றால் சொல்லத் தெரிகிறது. இந்த வாழை மரத்தை யார் செய்தார்கள்? கண்ணில் காட்டும் படியாக அதைச் செய்தவனைச் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் ஒருவன் அதைச் செய்திருக்கிறான். அதனால் இப்படி பட்டை பட்டையாகக் கணக்குப் பிசகாமல் உள்ளுக்குள்ளே அடுக்கிக்கொண்டே இந்த வாழை உண்டாகியிருக்கிறது. எந்த ஆயுதத்தை வைத்துக் கொண்டு அந்த ஒருவன் இத்தனை அழகாகப் பட்டைகளை அடுக்கினான் என்றால் தெரியவில்லை. இப்படியே அந்த மலையை, இதோ மேல் உள்ள நக்ஷத்திரங்களை, சந்திரனைச் செய்தவனை நம்மால் காட்ட முடியவில்லை. இவையெல்லாம் எத்தனையோ காலம் முன்னால் உண்டானவை. செய்தவனை எப்படிக் காட்டுவது என்று கேட்கலாம். சரி, இந்த ரோஜாப் புஷ்பம் இருக்கிறதே, இது அந்த வாழையைவிட சற்று சமீபத்தில் உண்டானதுதான். முந்தநாள் சிறு மொட்டாக இருந்தது. இப்போது அழகிய பூவாகியிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான இதழ்கள், ஒவ்வொன்றிலும் நுண்ணிய நரம்புகள், வாசனை எல்லாம் வந்திருக்கின்றன. நம் கண்முன்னமே இது மலர்ந்தது. ஆனாலும் மலர்த்தினவனை நமக்குத் தெரியவில்லை.  
 
மனிதன் எல்லாம் தெரிந்த கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு காட்டுமிருகம் சென்னைப் பட்டணத்தைச் சுற்றி வந்தால் எதுவுமே தனக்குத் தெரியவில்லை என்று எப்படி ஆச்சரியப்பட்டுப் பார்க்குமோ, அப்படித்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். மனிதனைவிடக் கெட்டிக்காரனாக ஒருவன் அவனை இப்படி வைத்திருக்கிறான்.  
 
அத்தனை ரோஜாப் பூக்களும் ஒரே தர்மத்தில் மலர்வதால், அத்தனை மலைகளும் ஒர் தர்மத்தில் நிலைத்து இருப்பதால், அத்தனை நக்ஷத்திரங்களும் ஒரே தர்மத்தில் சுற்றுவதால், இந்தச் சகலத்தையும் செய்தவன் ஒரே இஞ்சினியர் என்று தெரிகிறது. ஒரே ரீதியில், காரண காரிய விதியில், பிரபஞ்சம் முழுதும் கட்டுப்பட்டிருந்தால், இதைச் செய்தது ஒர் அறிவு எனத் தெரிகிறது.  
 
கெட்டிக்காரன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மனிதன், இத்தனையையும் இவனையும் செய்த அந்த மகா கெட்டிக்காரனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவன் மகா கெட்டிக்காரன் மட்டுமல்ல, மகா நல்லவனுங்கூட, இத்தனையை திட்டமிட்டுப் படைத்த பேறறிவு என்பதோடு, இத்தனையையும் ரக்ஷிக்கும் பெரும் கருணையும் அவன். நமது கெட்டிக்காரத்தனமும் அவன் தந்ததே என்று தெரிந்து கொண்டு அவனிடம் பிரார்த்தித்து கொண்டால் நமக்கு அவன் நல்லது செய்வான்.  
 
அவன்தான் ஸ்வாமி. ஸ்வாமி என்பவன். 
இந்த நமது கெட்டிக்காரத்தனமே அவனுக்கு ஒர் அடையாளம்தான். கள்ளனைக் கண்டுபிடிக்க மண்ணில் பதித்த காலடிச் சுவடு இருக்கிறதுபோல், உள்ளம் கவர் 'கள்வ'னான ஸ்வாமியின் காலடி, பிரபஞ்சத்தின் எல்லா இடத்திலும் பதித்து கிடைக்கிறது. நம் கெட்டிக்காரத்தனமும் அவனது காலடி அடையாளம்தான். இந்தக் கெட்டிக்காரத்தனத்துக்கெல்லாம் ஒர் ஆதாரம் இருக்க வேண்டும் என்று அது காட்டிக் கொடுப்பதால் அதுவே காலடியாகிறது. சிருஷ்டிகார்த்தனாக ஒரு ஸ்வாமி இருப்பதற்கு நாமே அடையாளம். நாம் ஒவ்ஒருவர் உள்ளங்கையிலும் அவன் தினுசு தினுசாகப் போட்டுள்ள ரேகை மாதிரி நம்மால் போட முடியுமா? இந்தப் பட்டணம் முழுவதிலும் அநேகம் மனிதர்களின் கெட்டிக்காரத்தனத்தால் செய்துள்ள காரியங்களைவிட அதிகமாக ஒரு சிறு இலையில் போட்டிருக்கிற ரேகைகளில் விசித்திரம் செய்திருக்கிறான் அவன். பிரபஞ்ச வஸ்து எல்லாமே அந்த மகா திருடனின் ரேகை அடையாளம்தான், திருடன் பதுங்கியிருப்பதுபோல் இவனும் பதுங்கியிருப்பவன்தான். அவன் குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்றே வேதம் திரும்பித் திரும்பித் சொல்லும்.

நம் இதயம்தான் அந்தக் குகை. நமக்குள்ளேயே ஒளிந்து கொண்டு நமக்கு வெளியே இத்தனை அற்புதங்களைச் செய்து, நம்மை ஆச்சரியப்படுத்தித் தன்னை தேட வைக்கிறான் ஸ்வாமி. அப்படி அவனைத் தேடுகிறதுதான் பக்தி .

- காஞ்சி மஹா ஸ்வாமிகள்
[Above excerpts and thoughts on / from Shri Kanchi Paramaacharya courtesy Sri Sai, Thuglak Online Reader Forum posts on Thuglak dated 22.12.2011]

No comments:

Post a Comment