Wednesday, January 25, 2012

Sanatana Dharma - Thoughts for the day 19.01.2012

பக்தி - உருவமும் அருவமும்
---------------------------------------------------

புஷ்பத்தின் வாசனை கண்ணுக்குப் புலப்படாது. மூக்குக்குத்தான் அது தெரியும். கற்கண்டின் தித்திப்பு மூக்குக்குத் தெரியாது. அது நாவுக்குத்தான் புலனாகும். சங்கீதம் நாவுக்குப் புலப்படாது. செவிக்குத்தான் புலப்படும். சூடும், குளிரும் தொடு உணர்ச்சி கொண்ட தோலுக்குத்தான் புலனாகும். இவற்றைக் காதால் உணர முடியாது. மேலே சொன்ன நாலும் கண்ணுக்குத் தெரியாது. மாறாகப் பச்சை சிகப்பு முதலிய வர்ணங்கள் காது, மூக்கு, வாய், தோல் இவற்றுக்குப் புலப்படாது. கண்ணுக்கே புலனாகும். நாஸ்திகர் உள்பட அனைவரும் நிச்சயமாக உண்டு என்று கூறுகிற உலக வஸ்துக்கள், இவ்விதம் ஒவ்வொர் இந்திரியத்துக்குப் புலனானாலும் போதும். எல்லா இந்திரியங்களுக்குப் புலனாக வேண்டியதில்லை என்று தெரிகிறது. நாலு இந்திரியங்களுக்குப் புலனாகாமல் ஒரே ஒர் இந்திரியங்களுக்குப் புலனானாலும் ஒரு வஸ்து இருப்பதாகவே சொல்கிறோம். உதாரணமாக சங்கீதம் காது ஒன்றுக்கே புலனாகிறது. அதை ருசிக்கவோ, பார்க்கவோ, முகரவவோ, தொடவோ முடியாது. இருந்தாலும் சங்கீதம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வதில்லை அல்லவா?

ஐந்து இந்திரியங்களுக்கும் புலனாகாமலும் உண்மையில் ஒரு வஸ்து இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்ப்போம். பிரபஞ்சம் முழுவதிலும் மின்சார அலைகளே வியாபித்திருக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆனால் நமக்கு எந்த இந்திரியத்தாலும் அதை அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், சில பரிசோதனைகளின் மூலம் மின்சாரத்தின் வியாபகத்தையும், அது சரீரம் மூளை எல்லாவற்றிலும்கூட வியாபித்திருப்பதையும் நிரூபித்துக்கா காட்டினால் நம்புகிறோம். இத்தனை இந்திரியங்களையும் அவை கிரகிக்கிற வஸ்துக்களையும் படைத்து ஒழுங்கு செய்து வைத்த ஒரு பெரிய அறிவு இருக்கவே செய்கிறது. அதைத்தான் கடவுள் என்கிறோம். மின்சாரத்தைப்போல அதுவும் எங்கும் வியாபித்திருக்கிறது. நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது. இந்திரியங்கள் அதிலிருந்து தோன்றி அது இயக்கி வைக்கிற முறையில் கட்டுப்பட்டே வேலை செய்கின்றன. கண்ணால் பார்க்கத்தான் முடிகிறது. கேட்க முடிவதில்லை. காதால் கேட்கத்தான் முடிகிறது. பார்க்க முடியவில்லை. இவை இப்படி இருக்கத்தான் வேண்டும் என்பது அந்தப் பராசக்தி வகுத்து வைத்த கட்டுப்பாடுதான். இப்படியாக எந்தப் பெரிய சக்திக்கு இந்த இந்திரியங்கள் கட்டுப்பட்டிருக்கின்றனவோ, அந்த மகா சக்தி இந்த இந்திரியங்களுக்குக் கட்டுப்படுமா? இதனால்தான் கடவுளை எந்த இந்திரியத்தாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைக் கொண்டு கடவுளே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.


கடவுள் மகா சக்தி படைத்தவர் மட்டுமில்லை. பரம காருண்டமும் பொருந்தியவர். எனவேதான் அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அருவமாயினும், பக்தர்கள் தங்கள் இந்திரியங்களால் கிரகித்து, கண்ணாரக் கண்டு, வாயாரப் பேசி, கையார ஸ்பரிசித்து மகிழும் வண்ணம் பல உருவங்களும் தருகிறார். கடவுள் இல்லை என்று வாதம் செய்கிறவர் வாதம் செய்கிறவர்களிடம் கருணை கொண்டு அவர்களுக்கே உருவத்துடன் காட்சி தருவார். அருவமாயினும் உருவம் கொள்வார். மின்சாரம் ஒயரில் வருகிறபோது அருவமாயிருந்தாலும், காற்றடக்கமான ஒரு கண்ணாடிச் சிமிழும் (BULB) அதனுள் சிறு கம்பியும் (filament) சேர்த்து ஸ்விட்சைப் போட்டால் அருவ மின்சாரமே ஜோதி ரூபமாகிறதல்லவா? தங்கள் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியைப் பூட்டிக்கொண்டு சிரத்தை என்கிற ஸ்விட்சைத் தட்டிவிட்டுக் கொண்டால், அருவமான கடவுள் திவ்ய மங்கள ஜோதியாகத் தரிசனம் தருவார். சூரிய வெப்பத்தில் கடல் நீர் ஆவியாகப் போகும்போது அருவமாகி விடுகிறது. அதுவே மேகமாகக் குளிர்ந்தால் நம் கண்ணுக்குத் தெரிகிற மழையாகிறது. இன்னமும் குளிர்ந்தால் கெட்டியான பனிக்கட்டியே ஆகிவிடுகிறது. நம் இதயம் எத்தனைக்கெத்தனை குளிர்ந்து ஈஸ்வரனை ஸ்மரிக்கிறதோ, அத்தனைக்கத்தனை ஸ்தூலமாக அருவ தத்துவம் உருவம் கொள்கிறது.

அல்லும் பகலும் இறைவனையே நாடி, வேறு ஆசைகளை அறவே மறந்து பக்தி செய்தால் அருவப் பரம் பொருளை நன்றாக உணரலாம். இப்படி ஒருவன் ஞானம் பெறுவதினால், பக்தி செய்வதினால் ஏனைய உலக மக்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். ஈசுவர தரிசனம் பெற்ற ஒருவனை, பரமாத்மாவை அநுபவித்த ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் மக்களின் தாபமெல்லாம் சமனமாகி அவர்களுக்கும் ஒர் ஆறுதலும் சாந்தியும் உண்டாகின்றனவே. அந்த சாந்திக்கு ஈடாக எந்த உலகப் பொருளைச் சொல்ல முடியும்? இதுவே ஞானியால், பக்தனால் உலகுக்கு ஏற்படுகிற மிகப் பெரிய நன்மை.

- காஞ்சி மஹா ஸ்வாமிகள்


Many acts relating to God, like building temples, digging tanks are performed. While executing them, there would be many
difficulties. There would come also several kinds of dishonour. Not minding any of these, they would complete their tasks
with mental one-pointedness removing impurities from their minds and letting the mind wander. By straightening their mind,
they acquire mind control and at the end, they realize the Reality that is to be known. Digging tanks, building temples and
such other acts are called 'Poortham'. The performance of sacrifices, etc., is known as 'Ishtam'. Combining these two, we
have the word 'Ishtapoortham'.

- Shri Kanchi Maha Swamigal


மஹா பெரியவர் (எஸ். ரமணி அண்ணா)

5. கணவனை விட்டு விட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா ?

பல வருடங்களுக்கு முன், ஸ்ரீ காஞ்சி மடத்தில் மஹா ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர் ஒரு இளம் வைதீகத் தம்பதி. அந்த இளம் வைதீகருக்கு சுமார் 25 வயதிருக்கும். அவர் மனைவிக்கு 20 இருக்கலாம்.

வேறு ஒரு பக்தரிடம் உரையாடிக் கொண்டிருந்த ஆச்சார்யாள், அதை நிறுத்தி விட்டு அந்த தம்பதியை நிமிர்ந்து பார்த்தார்.அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.

பெரியவா உற்சாகத்துடன், "ஏண்டாப்பா, நீ மதுரை சேஷு கனபாடிகளோட புள்ளையாண்டான் ரகுநாதன் தானே ? ஆனா...இப்போ உன்னை நான் அப்டி கேக்கக் கூடாது. ஏன்னா...இப்போ நீ ரகுநாத சாஸ்த்ரிகள் ஆயிட்டே! மதுரை ப்ராந்தியதுலே ஒங்கப்பா மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவனாகவும் ஆயிட்டே" என்று கேட்டு விட்டுத் தொடர்ந்தார்.

"இவ ஒன் ஆம்படையாள் (மனைவின்னு) தெரியறது. இவ திருச்சிராப்பள்ளி வைத்யநாத கனபாடிகளோட பேத்தி, சுப்ரமணிய வாத்தியாரின் ஏக புத்ரி. நான் சொல்லறது சரி தானே? போன வருஷம் ஒங்க கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துண்டு ஒங்க அப்பா கனபாடிகளும், மாமனார் சுப்ரமணிய வாத்தியாரும் மடத்து ஆசீர்வாதத்துக்காக வந்திருந்தாளே. அப்போ நீயும் வந்து நமஸ்காரம் பண்ணினே இல்லியா..சரி..சரி! இப்போ தம்பதி ஒத்துமையோட சௌக்கியமா இருக்கேளோனோ ?"
ஸ்வாமிகள் உரிமையோடு கேட்டு முடித்தார்.

உடனே ரகுநாத சாஸ்திரிகள், "ரொம்ப சௌக்கியமா இருக்கோம் பெரியவா, ஒங்க அனுக்ரஹத்திலே" என்று கை கூப்பிச் சொன்னார்.

பெரியவா விடவில்லை. "நீ சொல்லிப்டே. உன் ஆம்படையா வாயே திறக்கலையே" என்று சிரித்தார்.
உடனே அந்த இளம் மனைவி சுதாரித்துக் கொண்டு, "எம் பேரு அலமேலு பெரியவா...சந்தோஷமாத் தான் இருக்கோம்...,சந்தோஷமாத் தான் இருக்கோம்" என்று சொன்னாலும், அவள் குரலில் இழையோடிய வருத்தத்தை கண நேரத்தில் புரிந்து கொண்டார் ஸ்வாமிகள்.

"இல்லேம்மா, நீ ஏதோ மன வருத்ததோடு இருக்கேங்கறதை உன் குரல் சொல்லறதே?

என்ன...சொல்லு...சொல்லு" என்று அன்பாக விசாரித்தார் ஸ்வாமிகள்.


"அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியவா" சமாளித்தாள் அலமேலு.

"இல்லே...இல்லே! உன் குரல் சொல்றதே...நீ ஏதோ வருத்தத்துலே இருக்கேங்கறதை. என்ன விஷயம் சொல்லு" கனிவுடன் கேட்டார் ஸ்வாமிகள்.

அலமேலு தயக்கியபடியே,"பெரியவா, நா ரொம்ப தெய்வ பக்தி உள்ளவள். பால்யத்தில் இருந்தே சாஸ்திர சம்பிர தாயங்கள்ளே பூரண நம்பிக்கை உண்டு.கல்யாணத்துக்கு முன்னாடி நெறைய க்ஷேத்ராடனம் எங்க குடும்பத்தோடு, வேண்டியவாளோடு போயிருக்கேன். அது நேக்கு ரொம்பப் பிடிக்கும்.

இப்போ இவரோடு கல்யாணமாகி ஒரு வருஷமாறது. அதுக்கப்புறம் ஒரு இடம் போகலே பெரியவா. அது தான் வருத்தம் என்று முடிப்பதற்குள், "ஏன்..ஏன் போக முடியலே ?" என்று இடை மறித்தார் ஸ்வாமிகள்.

அலமேலு தயங்கியபடியே, "விவாஹதுக்குப் பிறகு நான் தன்னிச்சையா தீர்த்த யாத்திரை போக முடியாதோலியோ பெரியவா! பர்த்தாவும் (கணவனும்) கூட வந்தாத் தானே யாத்ரா பலன் கிடைக்கும் ? ரெண்டு மூணு தடவை கூப்பிட்டேன். வரமாட்டேன்கறார்" என்று விவரித்தவள், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

விஷயத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள், "அழப்படாது..அழப்படாது!" என்று சமாதானப் படுத்திவிட்டு, "என்ன ரகுநாத சாஸ்த்ரீகளே, ஆம்படயாளை இப்படி கண் கலங்க விடலாமோ ? நல்ல விஷயம் தானே சொல்லறா ? தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனம் கூப்பிட்டா போயிட்டு வர வேண்டியது தானே ? அதுல என்ன சிரமம் ?" என்று புருவங்களை உயர்த்திக் கேட்டார்.
இளைஞர் ரகுநாத சாஸ்திரிகள் மீண்டும் ஒரு தடவை பெரியவாளை நமஸ்கரித்து எழுந்து பவ்யமாகச் சொன்னார், "அவ சொல்லறதும் ஞாயம் தான் பெரியவா. ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை...பத்து நாளுக்குக் குறையாம மத்தவாளோட சேர்ந்து வட தேச க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை போயிட்டு வரணும்கறா. ஆகிற காரியமா அது பெரியவா? "


"ஏன் போயிட்டுத்தான் வாயேன்.ஆம்படயா தானே அன்போட கூப்பிடறா" இது ஸ்வாமிகள்.
உடனே ரகுநாத சாஸ்திரிகள் குரல் தழுதழுக்க,"பெரியவாளுக்கு எல்லாம் தெரியும்.நா வைதீகத்தை வ்ருதியா (தொழிலா) வெச்சுண்டுருக்கேன். அப்பாவுக்கும் ஒடம்பு முடியலே. அவர் பார்த்துடுண்டு இருந்ததை எல்லாம் இப்போ நா பாக்கறேன். வ்ருதியை விட்டுட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் பத்து பதினஞ்சு நாள் நான் எப்படி இவளோட யாத்திரை போக முடியும் பெரியவா ? நீங்களே சொல்லுங்கோ” என்று முடித்தார்.

சற்று நேரம் மௌனமாக இருந்த பெரியவா, பிறகு சிரித்துக் கொண்டே, "ஓஹோ! இந்த விஷயத்துலே என்னை சரியான மத்யஸ்தம் பண்ணி வெக்க சொல்லி கேக்க வந்தேளாக்கும் ?" என்று கூறி விட்டு தொடர்ந்தார், "அலமேலு சொல்லறதும் ஞாயம் தான். அவளுக்கு பக்தியுடன் தீர்த்த யாத்திரை போறத்லே ஒரு ருசி இருக்கு. கல்யாணம் ஆனப்புறம் பர்தாவுடன் (கணவனுடன்) போனத் தான் 'யாத்ரா பலன்' கிட்டும்கறதையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கா. ஆனா, நீ சொல்றதிலேயும் நியாயம் இருக்கு. நோக்கு வருத்தி வைதீகம். மாசம் முப்பது நாளும் ஜோலி சரியா இருக்கும். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஆம்படயாளுடன் தீர்த்த யாத்திரை போறது ரொம்ப ரொம்ப சிரமம். என்ன பண்ணறது ?"

"நீங்க தான் ஒரு மார்க்கம் சொல்லணும் பெரியவா..."இருவரும் கோரஸாக ஸ்வாமிகளைப் பிராத்தித்தனர். ஸ்வாமிகள் சற்று நேரம் யோசனை பண்ணியபடியே அமர்ந்திருந்தார். என்ன சொல்லப் போகிறாரோ என அங்கிருந்த அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார்.

"அலமேலு! ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் தீர்த்த யாத்ரா போகணும்க்கரதுலே நீ தீவிரமா இருக்கே.அதுலேயும், பர்த்தாவும் கூட வந்தாத் தான் யாத்ரா புண்ய பலன் கிடைக்கும்கற தர்ம சாஸ்திரத்தையும் தெரிஞ்சு வெச்சுண்டிருக்கே. வைதீகத்தை தொழிலா வச்சுண்டு இருக்கறதாலே, யாத்ரைக்கு உன் கூட அவர் வர்றது ரொம்ப சிரமம்க்றார். ஒரு காரியம் பண்ணுங்கோ..."ஆச்சார்யாள் முடிப்பதற்குள், "அனுக்ரகிக்கணும் பெரியவா" என்றனர் தம்பதி.


ஸ்வாமிகள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, "ஒரு மார்க்கம் சொல்றேன். கேளு அலமேலு. நீ எப்ப தீர்த்த யாத்ரைக்குப் கிளம்பினாலும், பொறப்படறதுக்கு முன்னாடி, ஆத்துக்காரரை கிழக்கே பார்த்து நிக்கச் சொல்லி நமஸ்காரம் பண்ணி பிரார்த்தனை பண்ணு. நீ என்ன பண்ணறே ரகுநாத சாஸ்திரிகளே, உன்னோட மேல் அங்க வஸ்திரத்தை எடுத்து ஆம்படையா கையிலே கொடுத்து, "இது நா உன் கூட தீர்த்த யாத்திரை வர்றதுக்கு சமானமானது. க்ஷேமமா போயிட்டு வா"னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு. தம்பதியா யாத்திரை போன புண்ணியமும் கிடைக்கும்...ஒத்தருக்கும் மன சிரமமும் இருக்காது. என்ன சந்தோஷம் தானே ?" என்று கனிவுடன் கேட்டு பிரசாதம் அளித்தார்.

மஹா பெரியவாள் சொன்ன இந்த பதிலால் இளம் தம்பதிக்குப் பரம சந்தோஷம். பெரியவாளை நமஸ்கரித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பெரியவாளின் சமயோசிதமான இந்த அனுக்ரஹத்தை கேட்டு, வியந்து மகிழ்ந்தனர்.


[Above excerpts from Kanchi Maha Swamigal Upadeshams and Wonders courtesy Sri Sai, Thuglak Online Reader forum posts on Thuglak issue dated 19.01.2012]

No comments:

Post a Comment