Monday, July 27, 2015

கடவுளைத் தேடி (பாலகுமாரன்) Part 3 (01.06.2015)

கடவுளைத் தேடி (பாலகுமாரன்)


பாலகுமாரன் அவர்கள் நக்கீரன் பத்திரிக்கையில் எழுதி வந்த தொடரின் தொகுப்பு.

பின்னாளில் அறிவு பூர்வமாய் ஆன்மீக ரீதியாய் தெரிந்துகொள்ள உபயோகப்படும் என்று இதை இங்கு தரவிறக்கம் செய்துள்ளேன்.

எழுதியது யார் என்பது முக்கியமல்ல,

அனுபவத்தை எழுதுகிறார், அவர் பின்னாளில் என்ன செய்தார் எப்படி வாழ்வில் உயர்ந்தார் அல்லது சிக்கிச் சீரழிந்தார் சமூகத்தில் கல்லடி பட்டார் என்பது அவர்தம் தனிப்பட்ட பிரச்சினை.

வளரும் இளைஞனுக்கு பலரது வாழ்க்கையும் அவர்தம் அனுபவமுமே பாடம். அதுவரை எழுத்தை மட்டுமே பார்ப்போம் என்பதே எனது தாத்பர்யம்.

போற்றுவார் போற்றுவதும் தூற்றுவார் தூற்றுவதும் போகட்டும் கண்ணனுக்கே!!

எமக்குத் தொழில் எழுதுவது, எப்படி எழுதுவது என்பதை கற்பது, இடையே வாழ்க்கைப் பாடமும் ஆன்மீகமும் இறையுணர்வும் கிடைத்தால் அதுவே ஒரு போனஸ்தான்.

நேரம் கிடைக்கும்போது வாசிப்பேன், வாசிப்போம், ஒழுக்கத்துடன் வளர்வோம்.

நல்லன கொள்வதும் அல்லன தள்ளுவதும் நம் கையில்தானே இருக்கிறது?


வேறு உள் நோக்கம் இல்லை.

அண்மைச் செய்திகள்
டெல்லி மகளிர் ஆணையராக சுவாதி மலிவால் நியமனத்துக்கு ஆளுநர் ஒப்புதல் || மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் : பெருந்திரள் பேரணி ஆர்ப்பாட்டம் (படங்கள்) || என் மகள் என் பெயரை கூகுளில் தேடும்போது கிரிக்கெட் வீரராக மட்டுமே அவள் அறியவேண்டும்;தீவிரவாதியாக அல்ல || மின்னலுடன் சென்னையில் கனமழை || 5-வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு || காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட : தென் சென்னை இந்திய மாணவர் சங்கம் (படங்கள்) || திருப்பதி லட்டு பெற தேவஸ்தான நிபந்தனை : அதிகரிக்கும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை || பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீசாரின் ஆன்லைன் விசாரணை || அத்வானி - முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு || அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய குழு : உயர்நீதிமன்றம் உத்தரவு || பஞ்சாப் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் முடிந்தது || முன்னாள் மத்திய அமைச்சருக்கு நான்கரை ஆண்டு சிறை || மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கண்டனம் : G.K.நாகராஜ் ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம் 
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம் 
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
......................................
குருமங்கள யோகம் தரும்...
......................................
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
......................................
விலங்குகளுக்கும் மெய்ஞ்ஞானம் தரும்...
......................................
காளிகாம்பாள் அற்புதங்கள்
......................................
வெள்ளை விநாயகர்!
......................................
திருமாலே தெய்வமென்றான் வாழி!
......................................
ஜூன் மாத ராசிபலன்கள்
......................................
எரிகல்லால் உருவான சனி...
......................................
நால்வகை நெறிகாட்டும்...
......................................
கடவுளைத் தேடி... (3)
......................................
பூமியின் ஆயுளைத் தீர்மானிக்கும்..
......................................
அழகன் எமன்!
......................................
தோஷங்களைத் துரத்தும் திருமுட்டம்
......................................
யாதுமாகி நின்றாள்!
......................................
ஆதிசித்தன் அருளிய யோகம்!
......................................
01-06-15



வேறு வேலை, வேறு இடம், தனி ரூம். பித்துக்குளி நண்பர்கள் இருந்தார்கள். காசு வைத்துவிட்டு பின்பக்கம் போய் திரும்பினால் காணாமல் போய்விடும். பூட்டு போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஐம்பது வயது ஆள், பூட்டப் படாத என் பெட்டியைத் திறந்து ஏழு ரூபாய் எடுத்ததை கண்ணால் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு சொந்த வீடு இருந்தது. சொத்தும் இருந்தது. ஆனாலும் அடுத்தவர் காசைத் திருடும் புத்தியும் இருந்தது. "அவன் காசுதானே திருடினான். நீ திருடியது என்ன' என்று கேள்வி கேட்டுக்கொண்டேன். உடம்பு நடுங்கியது. நாடி சுத்தி, தியானம் என்ற விஷயங்கள் கரையேற்றும் என்று நம்பி அதில் ஈடுபட்டேன். நாடி சுத்தி செய்ய முடிந்தது. காமமும் இருந்தது. காமம் அமைதியாகவும் நின்றது. ஆரவாரமும் செய்தது. மிகப்பெரிய போராட்டமான காலம் அது. என்னென்னவோ சொல்லித் தரப்பட்டது. "ஈரக்கோமணம் கட்டிக்கோ' என்று சொன்னார்கள். "குளிச்சிட்டு படு நல்லாயிருக்கும்' என்றார்கள். "அடிக்கடி மொட்டை அடிச்சுக்கோ. நல்லா தலைக்குக் குளி. மூளை சூடு குறைஞ்சா உடம்பு சூடு குறையும். மொட்டை அடிச்சுண்டா அந்த நிலையே அந்த முகமே உன்னை பெண்கள் பக்கம் போகவைக்காது. க்ராப்பும், தடிமனான உடம்பும், கொழுத்த கன்னமும்தானே ஆடவைக்கிறது. சோற்றைக் குறை. கேன்டீன்ல எடுத்தவுடனே மோர் சாதத்திற்கு போய்டு. எதற்கு பருப்புக் குழம்பு. அத்தனையும் சத்து. சத்துதான் எதிரி. உயிர்வாழ சாப்பிடு போதும்.'

டிராக்டர் கம்பெனி கேன்டீனில் வெறும் மோர் சாதமும், தொட்டுக்கொள்ள காயுமாய் உணவை முடித்தவன் நான் ஒருவனே. இரவு வெறும் வாழைப்பழம் மட்டுமே உணவு என்று வைத்திருந்தேன். ஆனாலும் இவையெல்லாம் சாதாரண உணவுகளைவிட மிகப்பெரிய சத்துக்கள் கொண்டவை என்பது பின்னால் தெரியவந்தது. காலையில் பொங்கல், மத்தியானம் தயிர்சாதம், இரவு வாழைப்பழம். ஈரக்கோமணம். எருமை மாடு மாதிரி உடம்பு இருந்தது. தடைகளை வெட்டி வெட்டி முன்னேறிய காலம் இது. "சண்டை போடாமல், காமம்- அது என்ன? விசாரித்து அறி' என்பது என்னுள் விதைக்கப்பட்டது. "செயலில் ஈடுபடும்போதே அதைப் பற்றி விசாரி. உன்னுள் என்ன இருக்கிறது. அது பிஸ்கெட்டா. அரைமணி நேரம் கிடைத்தால் சாப்பிடலாம். அரை மணி ஆகிவிட்டதா. இன்னொரு அரைமணி தள்ளிப்போடு. சர்க்கரைப் பாகில் தோய்த்த பாதுஷாவா. நாளைக்கு சாப்பிடு. தள்ளிப்போடு. ஒத்தி வை. காமத்தை, துக்கத்தை, கோபத்தை, பசியை, எல்லாவற்றையும் விலக்கி நிறுத்து. நிதானமாக அனுபவி. கோபத்தை நிதானமாக வெளிப்படுத்து. ருசியை நிதானமாக அனுபவி. துக்கத்தை தள்ளி வை.' இருபத்தியோரு வயது. ஐநூற்று அறுபது ரூபாய் சம்பளம். பத்து கிலோமீட்டர் சைக்கிள் பயணம். அவ்வப்போது கடற்கரை அலையில் இடையறாத மந்திரஜபம், நாடி சுத்தி, பிராணயாமம், தியானம், மகரிஷி மகேஷ் யோகி சங்கத்தில் கற்றுக்கொண்டது என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளுக் குள் நிரம்பிக்கிடந்தன. ""பி.காம் பஸ்ட் க்ளாஸ் முடிச்சுட்டேன். எம்.காம் சேந்திருக்கேன்.'' ""எம்.பி.பி.எஸ் முடிச்சுட்டேன். எம்.எஸ். பண்றேன்.''

""பி.இ முடிச்சுட்டேன். பிலாயில ஒர்க் பண்றேன்.  ஹிந்தியில கவிதைகூட எழுதறேன். ஹிந்தி ரொம்ப ஈஸியா. எதுக்கு கத்துக்க மாட்டேன்றீங்க. அவன் பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர். இண்டியன் ஏர்லைன்ஸ்ல ட்ராபிக் மேனேஜர்.''

""அப்படின்னா.''

""பெட்ரோல் எடை இவ்வ ளவு- அப்போது பயணிகள் எடை எத்தனை- அப்போது பயணிகள் எடுத்துப் போகின்ற உடமைகள் எத்தனை- மீதி ஏற்றப் படுகின்ற பார்சல்கள் எத்தனை என்று கணக்கிட்டு விமானத்தில் ஏற்றவேண்டும். இதுவரை மற்றவைகளை தவிர்க்கமுடியாது. ஏற்றுகின்ற பார்சல்களை எடை போட்டு கூடுதலாகவோ குறைவாகவோ சேர்க்கவேண்டும். நான் சொன்னால்தான் விமானம் புறப்படும். என் கையெழுத்து இருந்தால்தான் பைலட் விமானத்தை சுழலவைப்பார்.''

""என்ன சம்பளம்?''

""இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய். மாதத்திற்கு இரண்டு முறை விமானப் பயணம் இலவசம். அதைத் தவிர ஆன் டூட்டியாக சிலசமயம் இங்கும் அங்கும் போகவேண்டியிருக்கிறது. பார்ப்பதற்கு பைலட் உடைபோல இருக்கும். ஆனால் நான் பைலட் அல்ல. ட்ராபிக் மேனேஜர்.'' பி.ஏ. படித்தவன் ஆகிருதியாய், 

அழகாய் எதிரே நின்றபோது இன்னும் நான் ஜெயிக்கவில்லையோ என்ற ஏக்கம் வந்தது. ஆனால் அவனுக்கும் தமிழ்க்கவிதையில் ஈடுபாடு இருந்தது. ""பாலா, உன் கவிதை சூப்பர்டா.''

""எந்தக் கவிதை?''

""கவிழ்ந்த இருட்டில் மறைந்து கிடந்த உயரத் தென்னை நெற்றொன்று, வீசிய காற்றில் பிடிப்பைத் தளர்த்தி மண் ணில் விழுந்தது சொத் தென்று, இருளில் கையை உயர்த்தித் தடவி நெற்றைத் தேடிய ஐயங்கார், திரும்பக் காயுடன் என்னை குனிந்து கேட்டார், தூங்கலையா. பதிலாய் மெல்லிய சிரிப்பைக் கொடுப்பினும் மனசோ சொல்லும் வெகு உரக்க. நெற்றுத் தென்னை கழன்றதற்கே தூக்கம் போச்சே உங்களுக்கு. நெஞ்சே கழன்று வீழ்ந்து கிடக்க தூக்கம் எங்கே சொல்லுங்கோ. சாவடிச்சடா படவா. லவ் பண்றயா.''

""இல்லடா. லவ் பண்றமாதிரி நினைச் சுக்கறேன்.''

""வேணாம். லவ் பண்ணாத. கவுத்துர்றாளுங்க. 

பேசாத அப்பா- அம்மா சொல்ற பொண்ண கல்யாணம் செய்துக்கோ. எனக்கு பாத்துண்டு இருக்கா. நான் மூணு பேர செலக்ட் பண்ணி வைச்சிருக்கேன். எந்த இடத்தில வசதியா இருக்கோ, எந்த இடத்தில சௌகரியமா நம்மள நடத்துவாளோ அந்த இடத்தில பொண்ணு பாத்துக் கொடுன்னு சொல்லியிருக்கேன்.''

இரண்டாயிரத்து அறுநூறு சம்பளக்காரன் சொல்லலாம். நான் சொல்ல முடியுமா? உடன் சகோதரியே பிறக்காது, இன்னும் இரண்டு தம்பிகள் இருப்பவன் சொல்லலாம். நான் சொல்ல இயலுமா.

டிராக்டர் கம்பெனியிலும் வேலைப்பளு அதிகம். பயண நேரமும் அதிகம். பஸ்ஸில் ஏறி பயணப்பட்டால் சிலசமயம் ஒன்றரை மணி நேரம்கூட ஆகும். சைக்கிளில் முக்கால் மணி நேரத்தில் போய்விடலாம். ஆனால் முதுகு வலிக்கும். அயர்ச்சியாக இருக்கும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை லீவு என்பது தவிர, கொஞ்சம் கூடுதலான சம்பளம் என்பது தவிர, சிம்சன் கம்பெனியின் குமாஸ்தா என்கிற அலட்டல் தவிர வேறொன்றும் அங்கு சுவையாக இல்லை.

இதற்கு அந்த கம்பெனி காரணம் இல்லை. என்னுடைய புத்தி. உட்கார்ந்து ஒரு இடத்தில் வேலை செய்கின்ற புத்தியைக் கொண்டிருக்கவில்லை. நிழலாய் ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து, காலையில் மோரும் பிற்பகல் ஜுசும் இரண்டு வேளை டீயும் குடித்து, சொன்னதைச் செய்கின்ற வேலை. எந்த புத்திக்கூர்மையும் தேவைப்படவில்லை. எழுந்திரு, உட்கார், இதைச் செய், அதைச் செய், இங்கு வா, அங்கு போ என்ற கட்டளைகளை நான் நிறைவேற்றிக்கொண்டிருந்தேன்.

இது ஒரு மக்குத்தனமான வாழ்க்கை. புத்தி அந்த அலுவலகத்தில் ஈடுபடவேயில்லை. அலு வலகத்தில் ஈடுபடாது எழுதியோ, பாடியோ, ஆடியோ சம்பாதிக்கின்ற ஒரு விஷயத்தை என் வீடு ஆதரிக்கவில்லை. "மூன்றுவேளை மோர் சாதத்திற்கு கவலையில்லாத இருக்கணும். வேலை செய்தா டிராக்டர் கம்பெனி வேலை செய்யணும். சொல்லிப்பாரு. அதை விட்டுட்டு நான் கதை எழுதிண்டு இருக்கேன். கவிதை எழுதிண்டு இருக்கேன்னு சொல்றது மரியாதையாவா இருக்கு. எப்ப பாட்டு கத்துண்டு, எப்ப நீ கச்சேரி பண்ணி...'  எனக்கு மைக் பிடித்து சினிமா பாட்டு பாடும் ஆசை இருந்தது. ஆனால் அதில் காசு வராது. கொஞ்ச ரூபாய் காசுக்காக வாழ்க்கையை அலுவலகத்தில் அடமானம் வைத்த பலபேர்களில் நானும் ஒருவன். 

ஆனால் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஒருமனதாக டிராக்டர் கம்பெனியில் வேலைசெய்ய முடியவில்லை. நன்றாக வேலைசெய்கின்ற திறன் மட்டும்ஒரு கம்பெனியில் மரியாதையைக் கொடுத்து விடாது. இணக்கமாக, அனுசரணையாக, நேரம் தெரிந்து பேசவேண்டும். இதை சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ஜால்ரா அடிக்க வேண்டும்.

""என்ன சார் இருமறேள். நல்லாயில்லயே.''

சட்டென்று மேனேஜர் நெற்றியில் கைவைத்து, ""சுடறது சார். ஜுரம் இருக்கு.''

""தெரியலையேடா.''

""எனக்குத் தெரியறது. உள்ளுக்குள்ள இருக்கு. காத்தால என்ன சாப்டேள். ஒரு அனாசின்போட்டுக்கோங்கோ.''

இந்த மாதிரி விஷயங்களெல்லாம் கைப்பையில் தயாராக இருக்க வேண்டும். இப்படி பலநூறு வித்தைகள் இருக்கின்றன.

""அவன் பெரிய அயோக்கியனா இருக்கானே.'' 

""படு அயோக்கியன் சார். உங்களுக்குத் தெரியாது. எனக்கு நிறைய கதை தெரியும்.'' ஏதாவது இரண்டு கூடசேர்த்து இடவேண்டும்.

""அவனப் பார்த்தா பாவமா இருக்குப்பா.''

""ஆமாம் சார். ரொம்ப பாவம். இந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது.'' கூட இரண்டு சேர்த்து அவனைப் பற்றி பரிதாபப்பட்டும், புகழ்ந்தும் பேசவேண்டும். இதற்குப் பெயர்தான் அனுசரணை. இது தெரியாதுபோனால் வாழ்க்கையில் எங்கிருந்தாலும் ஜெயிக்கமுடியாது.

இது சரியா, தவறா? அதுவல்ல பிரச்சினை. இதை உன்னால் முழுமனதாகச் செய்யமுடியுமா முடியாதா. அதுதான் பிரச்சினை.

முழுமனதாகச் செய்தால் உன் மனோநிலை எப்படி இருக்கும். செய்யாது போனால் எப்படி இருக்கும்.

""என்னடா இது. அவன் வறான் போறான். குட் மார்னிங்கறான். ஒரு ஓரமா நிக்கிறான். ஜோக் அடிச்சாலும் சிரிக்க மாட்டேங்கறான்.''

""அவன் பெரிய இன்டலெக்சுவல் சார். கதை எழுதறானோன்னோ. ஆனந்தவிகடனிலும், குமுதத்திலும் வருதோன்னோ. அதனால ஒரு கித்தாப்பாதான் இருக்கான்.''

""கதை எழுதறானா? இங்க ஆஃபிஸில் வேலை செய்துண்டு என்ன கதை எழுதறது.''

""சொல்லிப் பாத்துட்டேன். இங்க ஆஃபிஸ்ல வேலை செய்யறதுல அவ்வளவு இஷ்டமில்ல. உங்களுக்கு அவனைப் பிடிக்கலைன்னா வேற டிபார்ட்மென்டுக்கு மாத்திடுங்கோ. நம்ம டிபார்மென்டுல வேலை செய்ய காத்துண்டு இருக்கா.''

குழி பறிப்பவர்கள் என்று இவர்களுக்குப் பெயர். நேரிடையாக கோபப்பட்டு எகிறுகிறவர்களைவிட மிக மோசமானவர்கள்.

""உன்னபத்தி அவ்வளவு நல்ல அபிப்ராயம் அவருக்கு இல்லப்பா. வேற யாரும் உனக்கு சொல்லமாட்டா. நான் சொல்றேன். நான் எத்தனையோ தடவை சப்போர்ட் பண்ணிப் பாத்துட்டேன். அவர் முரட்டுப்பிடிவாதமா இருக்கார்.'' நம்மிடம் வேறுவிதமாகப் பேசுவார்கள்.

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். மதி வேண்டும். நின் கருணை நிதி வேண்டும். நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்.'

எது நோய்? அடுத்தவரை வஞ்சிப்பதும், இடையறாது அதற்கு யோசிப்பதும்தான் மிகப்பெரிய நோய்.

இவர்களிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள நான் சென்னையில் கந்தசாமி கோவில் என்றுபுகழப்படும் கந்தக்கோட்டத்திற்கு செவ்வாய்க்கிழமையில் போனேன். எதிரிகளை நான் பொறுத்துக்கொள்வேன். துரோகிகளைத்தான் என்னால் அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஆபாசத்தைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முருகர் உபாசனையில் ஒரு உக்ரம் உண்டு. "தனத்தன தனத்தன, திமித்தமி திமித்தமி, டகுக் குடுக் டுடுடொன் தனபேரி' என்று மந்திர உச்சாடனங்கள் கலந்த பாடல்கள் உண்டு. இதற்குப் பலன் இருந்தது. முருகர் காரணமா. என் மன ஒருமையா. அல்லது வேறு ஏதேனுமா. துரோகிகள் அடிபட்டார்கள். அவர்கள் துரோகத்திலேயே அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

கந்தக்கோட்டம் எதிரிகளை ஜெயிக்கக்கூடிய, அதற்கு உதவக்கூடிய ஒரு இடமென்பது என்அபிப்ராயம். அநியாயமான தாக்குதலிலிருந்து அந்த தரிசனம் காப்பாற்றுகிறது. அது ஒரு வெற்று நம்பிக்கை. பயந்து அலையும் ஒரு இளைஞனுடைய பிடிப்பு. மனிதர்கள்மீது நம்பிக்கையிழந்து கடவுளை கைக்கொள்ளும் முயற்சி. தன்னைப் பற்றிய தெளிவை கடவுள் தருவார் என்கிற எண்ணம். அந்தக் கோவிலின் உள்ளே நான்கு பக்கமும் கட்டடங்கள் இருக்க, அதன் குளத்துப் படியில் அமர்ந்து வெறுமே தண்ணீரை வேடிக்கை பார்க்கும்போது, அலுவலகத்தில் செய்யவேண்டியதும் செய்யக் கூடாததும் எனக்குப் புரிந்தன. பதட்டமாக ஈடுபடாத கடவுள் வழிபாடும் என்னை அமைதியாக்கிற்று. அந்த அமைதி அலுவலகத்தில் அதிகம் உதவிபுரிந்தது.

விதம்விதமாக சம்பாதிக்கலாம். அதன் விளைவென்ன. முதலில் ஏற்படுவது பயம். யார் எப்போது காட்டிக்கொடுக்கப் போகிறார்கள்- எவரால் என்னவிதமான தொந்தரவு வரும் என்கிற பயம்.

எனவே, எந்தவித குறுக்குவழியும் இல்லாத நேரான ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் வாழ்வில் பயமில்லாது இருக்கலாம். 

வாழ்வில் பயமில்லாதபோதுதான் எழுத்துப் பணி சிறப்பாக இருக்கும். நீ சம்பாதிக்கிற ஆளா. அல்லது எழுத்தாளனா. எப்படியாவது ஏதாவது சம்பாதிக்க ஆசைப்படுகிறாயா. அல்லது இருப்பது போதும் என்கிற மனப்பான்மையா.

நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். நான் எழுத்தாளன் என்று தெள்ளத் தெளிவாக முடிவுசெய்துகொண்டேன். மூன்றுவேளை மோர் சாதத்திற்கு சம்பாதி என்று சொன்னார்களே. இந்த டிராக்டர் கம்பெனி மூன்று வேளை மோர் சாதத்திற்கு. என் வளர்ச்சிக்கு, என் அடையாளத்திற்கு, என் சிறப்பிற்கு நான் எழுத்தாளனாக மாறுவதே மிக முக்கியம் என்ற தெளிவு வந்துவிட்டது.

என் கதைகளைப் பாராட்டி எழுதிய சாந்தாவை நான் திருமணம் செய்துகொண்டேன். என் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தருவாள் என்று திடமாக நம்பினேன். திருச்சியில்வேலை செய்துகொண்டிருந்த, அரசாங்க உத்தியோகத்தில் இருந்த சாந்தா சென்னைக்கு வரவேண்டும். இடமாற்றம் என்பது நிச்சயம் கிடையாது. அப்படியொரு தனித்த அரசாணை இருக்கிறது. எனவே, அதற்கான முயற்சிகள் எவர் செய்தாலும் அது தோல்வியில்தான் முடியும். நான் மனம் சோரவில்லை. கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, மிக முக்கியமான அரசியல் நண்பர்களை சந்தித்தேன். அதில் ஒருவர் வலம்புரிஜான். நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிப் பாராட்டிக்கொள்கிற நண்பர்களாக இருந்தோம். "உன் வாழ்க்கைக்கு இது உற்சாகம் தருமெனில்- உன் எழுத்திற்கு இவர்கள் துணை அவசியம் எனில் எப்படியாவது சென்னைக்குக் கொண்டுவருவது என்னுடைய வேலை' என்று சொல்லி, ஒரே வாரத்தில் சாந்தாவை சென்னைக்குக் கொண்டுவந்தார்.

சாந்தா வந்த அடுத்த வாரம் கமலாவின் முன்னால் நான் திருமணம் செய்துகொண்டேன். கல்லெடுத்து அடித்தவரும், மண் தூவி சபித்தவரும், தலையில் விபூதி கொட்டி வசைபாடியவரும் உண்டு. நான் பயப்படவே இல்லை. பதிலுக்கு கோபப்படவில்லை. பல்கடிக்கவில்லை. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று தெள்ளத்தெளிவாக இருந்தேன். கமலாவை நான் அவளது விட்டுக்கொடுத்தலுக்காக அதிகம் கொண்டாடினேன். "ஒருக்காலும் பிரியமாட்டேன்' என்கிற நம்பிக்கையை அதிகம் ஏற்படுத்தினேன்.

இந்த அமைதியான போருக்குக் காரணம் தியானம். தியானத்தின் ஆரம்பத்தில் செய்துவந்த மந்திரஜபம். மந்திரஜபத்திற்கு முன்னால் செய்து வந்த மூச்சுப் பயிற்சி.

இது குறித்து சரியா தவறா என்று சமூக விமர்சனங்களுக்கு, என்னுடைய மனோநிலைமையும் தேவையும் தெரியாது. அதைப்பற்றிய அக்கறை இல்லாமல்தான் அவர்கள் விமர்சனம் செய்வார்கள். அந்த விமர்சனத்தை எதிர்த்தோமானால் இன்னும் உரக்க கத்துவார்கள். மறுத்தோமானால் முஷ்டி மடக்குவார்கள். பேசாமல் இருந்தால் தானாக ஓய்வார்கள். எதிர்த்த எழுத்தாளர்கள் பலர் என்னை எதிர்க்கிறோம் என்பதில் அதிகம் விளம்பரமானார்கள். "பாலகுமாரன் முக்கியமானவர் அல்லவா. அவர் செய்தது தவறல்லவா' என்று என்னுடைய பிரகாசத்தை மையமாக்கி, அதை இருட்டடிப்பு செய்தால் தாங்கள் பிரகாசமாக இருக்கமுடியும் என்று கணக்கு போட்டார்கள்.

அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு பொறாமை அதிகம் இருந்தது. "நாலாயிரம் சம்பளத்தோட ஃபஸ்ட் ஒய்ஃப். நாலாயிரம் சம்பளத்தோட இரண்டாவது ஒய்ஃப். இவனுக்குஆறாயிரம் சம்பளம்' என்றெல்லாம் துண்டு பேப்பரில் கணக்கு போட்டார்கள். "சம்பளம்தானா, வேற ஏதாவது சொத்து இருக்குங்களா' என்று கேள்வி கேட்டார்கள். இப்படி அலுவலகத்தில் கேட்ட எவருக்கும் வாழ்க்கைபற்றி எந்தக் குறிக்கோளும் இல்லை. ஜெயிக்கவேண்டும் என்கிற பரபரப்பு இல்லை. "தேடிச் சோறு தினம் தின்று' என்கிற ஆட்களாய் இருந்தார்கள். அவர்களுடைய அவசரமான வாழ்க்கைக்கு நடுவே என் இரண்டாவது திருமணம் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட புளியோதரை வேர்க்கடலையாய் இருந்தது. குச்சி போட்டு குத்தி அதை அரைத்துத் தின்பதே ஒரு ருசியாக இருந்தது.

லட்சியத்தில் அடையும் வெற்றிதான் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலாகஇருக்கமுடியும். நான் எழுதுவதை விடவேயில்லை. எழுதுவதற்கு இடைஞ்சலாக இருக்கும் எதையும் அனுமதிக்கவே இல்லை. கடும் உழைப்பு என்பதற்கு நான் உதாரணமாகத் திகழ்ந்தேன். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரமே தூங்கினேன். 

மற்ற நேரங்களில் படித்தேன். எழுதினேன். 

இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றேன். ஆங்கில நாவல்களும், தமிழ் இலக்கியமும் மாற்றி மாற்றிப் படித்த காலகட்டங்கள் அவை. மூன்று மணி நேரம் எழுந்திருக்காமல் எப்படி படிக்கமுடிகிறது என்று சாந்தா வியந்தாள். குறைவாகத் தூங்க எனக்கு தியானம்தான் உதவியது.

அலுவலகம் போய்வந்து குளித்துவிட்டு திருநீறு இட்டுக்கொண்டு, தெருமுனையில் இருக்கின்ற ஆஞ்சனேயர் கோவிலில் மாலை நேரம் பனியனும் லுங்கியும் மேலே துண்டுமாய் உட்கார்ந்து வெறுமே அரட்டை அடிக்கிற கூட்டம் இருந்தது. "இந்திராகாந்தியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என்று கேள்வி கேட்டு அவர்களாக பேசுவார்கள். அரசியல் அலசலில் எந்த லாபமும் இல்லை. எந்த முடிவுக்கும் வரமுடியாது. வெறுமே இரண்டேகால் மணி நேரம் உரத்த குரலில் பேசி சிரித்து முட்டாள்தனமாக கலைகின்ற கூட்டம் அது.

யாரை நண்பர்களாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற தெளிவு அந்த நேரம் எனக்குத் தேவையாக இருந்தது. வெளிப்பக்கம் யாருமே நண்பர் இல்லை. என் இரண்டு மனைவியர் மட்டுமே நான் நம்புகின்ற நண்பர்கள். உயிர் கொடுக்கும் நண்பர்கள் என்று எனக்குஅன்றிலிருந்து இன்றுவரை எவருமில்லை. விலகி நின்று கரம்கூப்பும் நண்பர்களே எனக்கு அதிகம். இது எனக்கு சௌகரியமாக இருந்தது. என் வாழ்க்கை, என் தினசரி நடவடிக்கை  என் கையில் இருந்தது. நண்பனுக்காக திரைப்படம் போதல், நண்பனுக்காக ஊர் சுற்றுதல், நண்பனுக்காக மூட்டை தூக்குதல் என்பதெல்லாம் எனக்கில்லை. அதேபோல சின்னஞ்சிறு உதவிகளைக் கேட்பதும் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. என் அறையை நான் சுத்தம் செய்வதுபோல வேறு யாரும் சுத்தம் செய்யமுடியாது. என் மனைவியையும் அதில் நான் ஈடுபடுத்த மாட்டேன். கதை எழுதுவதைப் பற்றி, படித்த இலக்கியம் பற்றி நண்பர்களிடம் பேசுவதில்லை. யாராவது பேசினால் சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருப்பேன். மற்றவர்களுடைய எடை மதிப்பு எனக்குள் வரக் கூடாது என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது.

இது இவ்விதம் இருக்க, கடவுள் பற்றிய விஷயத்தை நான் எவரோடும் கலந்து ஆலோசித்தது இல்லை. கேள்வி கேட்டதில்லை. ஆன்மிகப் பெரியவர்கள் என்று சிலரிடம் நான் இதைக் கேட்டபோது, அருகே இருப்பவர்கள் சிரிப்பதற்குத்தான் அந்தக் கேள்வியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ""கடவுள் தூணிலும் இருக்கார், துரும்பிலும் இருக்கார். இதோ இந்த தூணிலும் இருக்கார். போய் உடைச்சுடாதே. பாத்துப் பாத்துக் கட்டினது'' 

என்று ஒரு பெரியவர் ஜோக் அடித்தார். கூட்டம் சிரித்தது.

""நரசிம்மர் வந்துடுவாரோன்னு உங்களுக்கு பயம்'' என்று நான் திருப்பி அடித்தேன். நரசிம்மர் வரமாட்டார் என்று சொல்லவும் முடியவில்லை. வருவார் என்று தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் அவர் சூட்சுமம் மிகுந்த ஆள்.

""நரசிம்மர் வந்துடுவார். அது நிச்சயமா தெரியும். வந்து உன்னைக் கிழிச்சு குப்பையில போட்டாக்கா நான் என்ன செய்வேன். நான் இல்ல கோர்ட்டு கேசுன்னு அல்லாடணும்'' என்று சொல்ல, கூட்டம் மறுபடியும் சிரித்தது. என் கேள்வி அபத்தமாய்ப் போயிற்று. இனி எவரிடமும் இதைப்பற்றி கேட்கக்கூடாது; கடவுள் பற்றி விசாரிக்கக்கூடாது என்று நான் தீர்மானம் செய்து கொண்டேன்.

கடவுள் தேடல் என் மன உளைச்சலாய்ப் போயிற்று. மனதின் ஓரத்தில் அது வளர்ந்து கொண்டே இருந்தது. எப்பொழுதெல்லாம் தனிமை கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் நான் ஒட்டுமொத்தமாக வாழ்வு என்பது பற்றியும், மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்வு பற்றியும், யார் இதை நிகழ்த்துகிறார்கள் என்கிற கேள்வியோடும் அலைந்தேன்...

(தொடரும்)



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name *:
Email Id *:
Loading...
Left:  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500):

கடவுளைத் தேடி (பாலகுமாரன்) Part 2 (01.05.2015)

http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=23361

கடவுளைத் தேடி (பாலகுமாரன்)


பாலகுமாரன் அவர்கள் நக்கீரன் பத்திரிக்கையில் எழுதி வந்த தொடரின் தொகுப்பு.

பின்னாளில் அறிவு பூர்வமாய் ஆன்மீக ரீதியாய் தெரிந்துகொள்ள உபயோகப்படும் என்று இதை இங்கு தரவிறக்கம் செய்துள்ளேன்.

எழுதியது யார் என்பது முக்கியமல்ல,

அனுபவத்தை எழுதுகிறார், அவர் பின்னாளில் என்ன செய்தார் எப்படி வாழ்வில் உயர்ந்தார் அல்லது சிக்கிச் சீரழிந்தார் சமூகத்தில் கல்லடி பட்டார் என்பது அவர்தம் தனிப்பட்ட பிரச்சினை.

வளரும் இளைஞனுக்கு பலரது வாழ்க்கையும் அவர்தம் அனுபவமுமே பாடம். அதுவரை எழுத்தை மட்டுமே பார்ப்போம் என்பதே எனது தாத்பர்யம்.

போற்றுவார் போற்றுவதும் தூற்றுவார் தூற்றுவதும் போகட்டும் கண்ணனுக்கே!!

எமக்குத் தொழில் எழுதுவது, எப்படி எழுதுவது என்பதை கற்பது, இடையே வாழ்க்கைப் பாடமும் ஆன்மீகமும் இறையுணர்வும் கிடைத்தால் அதுவே ஒரு போனஸ்தான்.

நேரம் கிடைக்கும்போது வாசிப்பேன், வாசிப்போம், ஒழுக்கத்துடன் வளர்வோம்.

நல்லன கொள்வதும் அல்லன தள்ளுவதும் நம் கையில்தானே இருக்கிறது?

வேறு உள் நோக்கம் இல்லை.
அண்மைச் செய்திகள்
டெல்லி மகளிர் ஆணையராக சுவாதி மலிவால் நியமனத்துக்கு ஆளுநர் ஒப்புதல் || மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் : பெருந்திரள் பேரணி ஆர்ப்பாட்டம் (படங்கள்) || என் மகள் என் பெயரை கூகுளில் தேடும்போது கிரிக்கெட் வீரராக மட்டுமே அவள் அறியவேண்டும்;தீவிரவாதியாக அல்ல || மின்னலுடன் சென்னையில் கனமழை || 5-வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு || காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட : தென் சென்னை இந்திய மாணவர் சங்கம் (படங்கள்) || திருப்பதி லட்டு பெற தேவஸ்தான நிபந்தனை : அதிகரிக்கும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை || பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீசாரின் ஆன்லைன் விசாரணை || அத்வானி - முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு || அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய குழு : உயர்நீதிமன்றம் உத்தரவு || பஞ்சாப் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் முடிந்தது || முன்னாள் மத்திய அமைச்சருக்கு நான்கரை ஆண்டு சிறை || மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கண்டனம் : G.K.நாகராஜ் ||
Logo
ஓம்
பானகம் அருந்தும் அதிசய நரசிம்மர்!
......................................
ஏழு ஸ்வரங்கள் அருளிய புரந்தரதாசர்!
......................................
மகாவிஷ்ணுவுக்குத் தாயான...
......................................
சமதர்மம் காக்கும் சமுதாய விழா!
......................................
வல்லபாச்சார்யா!
......................................
மே மாத ராசிபலன்கள்
......................................
சித்தர், வானவர், தானவர் வணங்கும்...
......................................
கம்பருக்கு அருளிய கம்பர்!
......................................
கவலையெல்லாம் தீர்க்கும்...
......................................
கடவுளைத் தேடி... (2)
......................................
மே மாத எண்ணியல் பலன்கள்
......................................
பத்துவித பாவம் போக்கும் வைகாசி!
......................................
வல்வினைகள் நீக்கும் கருவி!
......................................
அற்புதம் நிகழ்த்திய அன்னை!
......................................
இந்துமதம் நிலைத்து நிற்பது எதனால்?
......................................
ராமன் என்னும் செம்மைசேர் நாமம்!
......................................
கண்டறியாதன கண்டேன்!
......................................
01-05-15





எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
2


நூற்று எழுபத்தைந்து ரூபாய்க்கு கூலிவேலை செய்கிறேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. செய்வன திருந் தச் செய் என்று அதில் என் முழு சக்தியையும் செல விட்டேன். அப்போது ஈவினிங் காலேஜ் என்பது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. "பி.ஏ. எகனாமிக்ஸ் படி போதும். பகபகன்னு மேல வந்துரலாம்' என்று எல்லாரும் சொன்னார்கள். 

என் தந்தை அதிகம் வற்புறுத்தினார். "பாலகுமாரன் பி.ஏ.ன்னு போட்டுண்டா எத்தனை அழகு'. ஆசைகாட்டினார். எல்லா தந்தையும் செய்கின்ற விஷயம். எல்லா பிள்ளைகளும் கேட்டுக்கொள்கின்ற விஷயம். வீட்டிலிருந்து பக்கத்தில் இருக்கின்ற நியூ காலேஜுக்கு லொங் லொங் கென்று போய், அங்கு பி.ஏ. எகனாமிக்ஸ் கிளாஸில் பென்ச் சூடு செய்துவிட்டு, புரிந்தும் புரியாததுமாக வெளியே வரவேண்டும்.

"இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கமுடியாதா.' நான் ஆவலுடன் கேட்டேன். "சொல்லித் தருகிறவனே திணறித்திணறி கக்கறான். நாலு ஷேக்ஸ்பியர் முடிக்கணும். நாக்கு தள்ளிடும். ஃபெயிலாறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. எகனாமிக்ஸ்ல ஈஸியா பாஸ் செய்துடலாம். இரண்டு வருஷம் பொறுத்துக்கோ. பி.ஏ. எகனாமிக்ஸ் தமிழ்ல வரப்போறது. நீயெல்லாம் கதை கதையா எழுதலாம். மார்க் அள்ளிண்டு வந்துரலாம். நமக்கு வேணும் கறது பி.ஏ. அது தமிழா இருந்தா என்ன, தெலுங்கா இருந்தா என்ன, அது இங்கிலீஷாஇருந்தா என்ன' என்று ஒரு ஆலோசனை தரப்பட்டது. நான் சகலமும் புறக்கணித்துவிட்டு சனி, ஞாயிறுகளில் மாவட்ட நூலகத்தை தஞ்சமடைந்தேன். பழைய ராலே சைக்கிள் எண்பது ரூபாய்க்கு கிடைத்தது. நூற்று எழுபத்தைந்து ரூபாயில் நூற்றைம்பது ரூபாய் அம்மாவிற்கு கொடுத்துவிட, இருபத்தைந்து ரூபாய் என் பாக்கெட்டில் இருந்தது. 

அதைத் தவிர, ஓவர் டைம் காசும் இருந்தது. எனவே எண்பது ரூபாய் எனக்கு சுமையாக இல்லை. விற்றவருக்கு கோதுமை அல்வா, மசால் தோசை, டிகிரி காபி வாங்கிக்கொடுத்தேன். ஆறும் ஆறும் பன்னிரெண்டு ரூபாய்தான் செலவு. விற்றவன் நன்றியில் அந்த வண்டிக்கு ஆயில்போட்டுக் கொடுத்தான். புறாவின்மீது பயணம் செய்வதுபோல அது இருந்தது.

பதினெட்டு வயதில் ஒரு சைக்கிளுக்கு நான் உடைமையாளன் என்பது மிகப்பெரிய சந்தோஷம். கையில் எப்போதும் பத்து பன்னிரண்டு ரூபாய் காசு இருப்பது இன்னும் பெரிய விஷயம். இதற்காகவே நண்பர்கள், வேலை கிடைக்காத தோழர்கள் என்னிடம் நெருங்கிய தோழமை பாராட்டினார்கள். "பசிக்குது. பக்கோடா வாங்கிக் கொடுடா' என்று கேட்பார்கள். வெங்காய பக்கோடாவும், ஒரு கப் டீயும் மிகப்பெரிய சந்துஷ்டி.

மாவட்ட நூலகத்தில் எனக்கு படிக்க பல புத்தகங்கள் இருப்பினும் நான் தேர்ந்தெடுத்தது ராஜயோகம், ஸ்திரீ புருஷ வசியம், கைரேகைக் களஞ்சியம், நவகிரகப் பலன்கள், பிரசன்ன ஜோதிடம். இதைக் கற்பதில் மிகப்பெரிய லாபம் இருப்பதாய் நான் உணர்ந்தேன். எல்லாருக்கும் எதிர்காலம் பற்றி மிகுந்த பயமிருந்த காலம் அது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் துல்லியமாகப் பலன்சொல்ல நிறைய பேருக்குத் தெரியவில்லை. லக்னம் இது என்றால் குரு எங்கே, குரு இந்த இடத்தில் இருந்தால் புதன் இப்படி, புதன் இந்த இடத்தில் இருந்தால் சனியும் ராகுவும் இப்படி இருப்பார்கள் என்று மடமடவென்று கட்டங்களை நிரப்ப நான் கற்றுக்கொண்டேன்.
ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் ஒட்டினால் என்ன பலன். ஒட்டாது போனால் என்ன பலன். ஆள்காட்டி விரலுக்கும், நடுவிரலுக்கும் நடுவே இருதய ரேகை முடிந்தால் ஒரு பலன். முடியாது குரு மேட்டிற்குப் போனால் ஒரு பலன். குரு மேட்டில் சுழி இருந்தால் ஒரு பலன். பெருக்கல் குறி இருந்தால் ஒரு பலன். குரு மேட்டில் வளையம் இருந்தால் ஒரு பலன். புதன் மேட்டில் கோடு இருந்தால் ஒரு பலன். சுக்கிர மேட்டில் வளையம் இருந்தால் ஒரு பலன். சங்கு ரேகை, சக்கர ரேகை, கோதுமை ரேகை, தீவு ரேகை. நான் கெட்டிக்காரன் அல்ல. ஆனால் மக்கு இல்லை. எனக்கு என்ன பிடித்ததோ அதைத்தான் என்னால் ஸ்வீகரிக்க முடியுமே தவிர, எது பிடிக்காததோ அதை கொஞ்சம்கூட ஸ்வீகரிக்க முடியாது. இது பலமா, பலவீனமா? இரண்டும்தான்.

கிருஷ்ணர் பக்கம் இழுக்கப்பட்ட நான் ஏன் கிருஷ்ணரோடு ஐக்கியமாகவில்லை. ஏன் பிரம்மச்சாரியைப் பிடித்துக்கொள்ளவில்லை. ஏன் ராஜயோகம், ஸ்திரீ வசியம் என்று போனேன். இதுதான் திமிர். அகந்தை, கொழுப்பு, ஆணவம் என என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஸ்திரீ வசியம் செய்ய நெற்றியில் பட்டாணி அளவு குங்குமம் வைத்துக்கொள். அக்னி ஹோத்ரம் செய்த கரியை நெற்றி உச்சியில் தரித்துக்கொள். இடது தோள், வலது தோள், நடு மார்பு, கழுத்து, பின் கழுத்து, உச்சி, நெற்றி என்று எல்லா இடத்திலும் அந்த தர்ப்பை பொசுக்கின் ரட்சையை பூசிக்கொள். சுயம்வர பார்வதி என்கிற மந்திரம் இருக்கிறது. அதைச் சொல். புத்திசாலித்தனம் வேண்டுமாமே. அது இல்லாமல் எதுவும் நடக்காதாமே. மேதாலக்ஷ்மி சொல். இரண்டும் சொல்வதற்கு முன்பு பாலா கற்றுக்கொள்ள வேண்டும். பாலா திரிபுரசுந்தரி மந்திரம் கற்றுக்கொள்ளும் முன்பு கணபதி மந்திரம் கற்றுக்கொள்ள வேண்டும். கணபதி மந்திரங்களில் உச்சிஷ்ட கணபதி மந்திரம் பேய் பிசாசுகளை வெல்லவல்லது.

எது சுயம்வர பார்வதி மந்திரம். இதோ மனனம் செய்துகொள்.

"ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி யோகவ சங்கரி சகல தாவர ஜங்கமஸ்ய முகஹ்ருதயம் மமவசம் ஆகர்ஷ்ய ஆகர்ஷ்ய ஸ்வாஹா.'

அவருடைய முகமும் ஹ்ருதயமும் என்னிடத்தே ஆகர்ஷமாகட்டும் என்கிற மந்திரம்.

"ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ரும் ஸ்ரீம் ரும் சிவதூத்யை நமஹ. ரும் சிவதூதி நித்யாம் ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நமஹ' என்கிற மேதாலக்ஷ்மி மந்திரமும், "ஓம் ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா' என்கிற மூகாம்பிகை மந்திரமும், "ஐம் க்லீம் சௌ சௌ க்லீம் ஐம் ஐம் க்லீம் சௌ' என்கிற பாலா திரிபுர சுந்தரி மந்திரமும், "ஓம் ஹஸ்தமுகாய லம்போதராயா உச்சிஷ்ட மகாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹும் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா' என்கிற உச்சிஷ்ட மகா கணபதி மந்திரமும், "ஆஹா பிடிபட்டதே... பாஞ்சாலங்குறிச்சி பிடிபட்டதே' என்று பானர்மேன்போல நான் கத்தி உருவி மிக குதூகலமாக கூவினேன். எதற்கு பி.ஏ. 

எகனாமிக்ஸ்? கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்கள் உள்ளன. என் அன்றைய கணக்கு தவறவே இல்லை. எதனால் இந்த திருப்பம் நிகழ்ந்தது? இது கடவுள் அருளா. என் திட்டமிடலா. இல்லை. அந்த நாள் மாவட்ட நூலகத்திற்குப் போகும்போது என் கையில் ராஜயோகமும், ஸ்திரீ வசியமும் கிடைத்தது எப்படி? யார் தள்ளிவிட்டார்கள்? கைரேகை களஞ்சியமும், நவகிரக நாயகர்களும் நான் ஏன் தேடினேன். எவர் தூண்டிவிட்டார்கள்?

இந்த இந்த மந்திரங்களுக்கு இன்ன இன்ன பலன். அதை இந்த விதமாகச் செய்யவேண்டும். அதற்கு இன்ன விதமான நைவேத்யம், இன்ன விதமான புஷ்பம், இன்ன விதமான பூஜை என்ற புத்தகத்தை நான் ஏன் மனனம் செய்ய வேண்டும்? எனக்கு என்ன வேண்டும். ஸ்திரீ புருஷ வசியமா, ராஜயோகமா, கைரேகை ஞானமா அல்லது மந்திர ஜபத்தின் சித்தியா? எல்லாமும்தான். இதுதான் பேராசை, ஆவேசம். பி.ஏ. எகனாமிக்ஸில் என்னால் பொருந்த உட்கார முடியாது. முழு அட்டெண்டஸ் கொடுத்திருக்கமாட்டேன். ஆனால்அலுவலகத்திலிருந்து சைக்கிள் மிதித்து மாலை ஆறு மணிக்கு மாவட்ட நூலகம் போய், அங்கு ஏழு எட்டுவரை புத்தகங்கள் படித்துவிட்டு, எட்டு மணிக்கு மூடும்போது கிளம்பி வீட்டிற்கு வந்து, குறிப்பு எடுத்துக்கொண்டு வந்த காகிதங்களை அடுக்கிவைத்து அவற்றை கற்றுக் கொள்வதை என் வீடு பார்த்தது.

"உருப்படற வழியே கிடையாதா. தெரியாதா.' என் தகப்பனார் அலுத்துக்கொண்டார். "இது சொன்னா பலன் கிடைக்குமாடா.' என் தாயார் ஆச்சரியப்பட்டார். பதினெட்டு வயதா, பத்தொன்பது வயதா. யார் மூலமும் அல்லாமல் மாவட்ட நூலகத்தின் உதவியோடு நான் மந்திரஜபங்கள் கற்றுக்கொண்டேன். குரு என்பவர் எங்கிருக்கிறார். யாருக்குத் தெரியும். "குரு மூலம் கற்றுக்கொண்டால்தான் மந்திரமா. இப்போது சொல்கிறேனே' என்று அட்சரம் பிசகாமல் சொன்னேன். இதற்கு என்ன வேண்டும். வைராக்கியமா, குருவா? வைராக்கியத்திற்குத்தானே குரு. அதைத் தூண்டிவிடுவதுதானே அவர் வேலை. அது எனக்கு இயல்பிலேயே இருக்கிறதே என்று நான் யோசித்தேன்.

வீட்டில் உட்கார்ந்து சொன்னால் வெங்கலப் பானையின் சத்தமும் வாணலியில் கரண்டி போட்டு வறுப்பதும் மூக்கையும் காதையும் தொந்தரவு செய்கின்றன. இன்னும் நல்ல இடம் வேண்டும். எது? இதோ இருக்கிறதே மெரினா பீச். இரண்டு பூட்டாகப் போட்டு சைக்கிளைப் பூட்டிவிட்டு பீச்சில் உட்கார்ந்திருப்பேன். 

அப்போதும் நோண்டுகிறார்கள் என்று சைக்கிளை ஒரு ஓட்டலில் வைத்துப் பூட்டிவிட்டு, ஓட்டலில் காபி சாப்பிட்டுவிட்டு வெளியே அப்படியே நகர்ந்துபோய் பீச்சிற்குள் நுழைந்து, ஆறிலிருந்து ஒன்பது வரை கடற்கரையோரம் அலைகளுக்கு முன்னே நின்று மந்திரஜபம் சொல்வதும், "ஏ காளி, பராசக்தி என் முன்னே வா' என்று இரண்டு கைவிரித்துக் கத்துவதும்எனக்கு தினசரி விஷயங்களாயின. இன்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கும் சிரிப்பாக இருக்கக்கூடும். ஆனால் நான் மிகுந்த சத்தியமாக அதைச் செய்தேன். மிகுந்த நம்பிக்கையோடு அதில் ஈடுபட்டேன். "ஏ, காளி, பராசக்தி என்முன்னே வா.' யாரோ ஒரு தொண்டு கிழவி இருட்டில் கடற்கரை அலைகளிலிருந்து கால் நனைத்தபடி என்னை நோக்கிவந்து சிரிக்க, நடுங்கிப் போனேன். அந்தக் கிழவி நிஜமா, தேவதையா, எங்கிருந்து வந்தாள், ஏன் என்னைப் பார்த்து சிரித்தாள். எனக்குத் தெரியவில்லை. இன்றும்கூட அந்த முகம் ஞாபகம் இருக்கிறது.

பராசக்தி பட்டுப்புடவையோடுதான் வருவாள். கிரீடத்தோடும், நெக்லஸோடும்தான் நிற்பாள் என்பது என்ன நிச்சயம். இது பராசக்தியாக இருக்கக்கூடாதா. அந்தச் சிரிப்பு நன்றாகத்தானே இருந்தது. பதிலுக்கு ஏன் என்னால் சிரிக்க முடியவில்லை. ஏன் அவள் காலில் விழமுடிய வில்லை. அவள் மீனவப் பெண்மணி என்று நினைத்தேனோ. பிச்சைக்காரி என்று நினைத்தேனோ. எனக்கு ஏன் அடக்கமில்லை. இப்போது வந்து ஏன் அரற்றுகிறேன் என்று மூன்று நாளைக்குப் பிறகுதான் அதை முழுவதுமாக யோசித்து என்னுள் தேக்கிக்கொண்டேன். மிகவும் அகம்பாவி. கவனம் கவனம் என்று சொன்னேன். எல்லாருக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்று இன்னொரு புத்தகம் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டேன். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் என்று என்னுடைய இடம் வேறு பக்கம் போயிற்று.

பதினெட்டு வயதில் தன்னந்தனியே கடவுள் தேடினேன். மந்திரஜபம் செய்தேன். என்னை மாதிரி இரண்டும்கெட்டானை எந்த நண்பன் ஏற்றுக்கொள்வான். ஒன்று அவர்கள் சினிமாவில் இருந்தார்கள். அல்லது வீட்டோடு ரசம் சாதம், மோர் சாதம் சாப்பிட்டுவிட்டு, எங்கு வேலை கிடைக்குமென்று அலைந்து கொண்டிருந்தார்கள். என் நண்பர்களில் பலர் நான்கு தங்கைகளோடும், மூன்று தம்பிகளோடும் தவித்துக்கிடந்தார்கள். நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் போதும் என்று விக்கி விக்கி கோவிலில் அழுதார்கள். 

என் சம்பளம் இருநூற்று பதினைந்து ரூபாய் என்று உயர்ந்தது. பழைய ராலே சைக்கிளைக் கொடுத்துவிட்டு புத்தும்புது பச்சை நிற ராலே சைக்கிளை வாங்கமுடிந்தது.

லாயிட்ஸ் ரோடில் ராஜேஸ்வரி லெண்டிங் லைப்ரரி என்று ஒரு கடை இருந்தது. 

பதினைந்து ரூபாய் டெபாசிட். ஒரு புத்தகத்திற்கு ஒரு ரூபாய். புதிய புத்தகமாக இருந்தால் இரண்டு ரூபாய். மற்றபடி பழைய புத்தகமாக இருந்தால் எட்டணா. சில புத்தகங்களுக்கு நாலணா. புரிகிறதோ புரியவில்லையோ- நான் நாலணா புத்தகங்கள் நாலு ஆங்கிலத்தில் எழுதியது கொண்டுவருவேன். கஷ்டப்பட்டு படிப்பேன். சிலசமயம் டிக்ஷ்னரியும் அருகில் வைத்துக்கொள்வேன். அரைகுறையான புரிதல்தான் இருந்தது. ஆனால் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இங்கே நான் விரும்பிப் படித்தது ஜேம்ஸ் ஹாட்லி சேஸ். அமெரிக்கன் ஸ்லேங் அதில் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. நிறைய வசனங்கள் வரும். அந்த வசனங்களைத் திரும்ப உரக்க படிக்கும்போது ஆங்கிலத்தில் பேசுகின்ற சுகம் இருந்தது. அதை தினசரி வாழ்க்கையிலும் உபயோகப்படுத்த முடிந்தது. "ஆஃபிஸ் போறான் இல்ல... அதான் இங்கிலீஷில் பேசறான்' என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வியப்போடு பேசினார்கள். தங்கள் பிள்ளைகளை இடித்துக் காண்பித்தார்கள். "டோண்ட் "ஃபீல் ஸாரி. ஐம் பர்பெக்ட் ஆல்ரைட்' என்று, எவர் காலோ தடுக்க எழுந்து ஆங்கிலத்தில் பேசினால், தடுமாறியதைவிட ஆங்கிலத்தில் பேசியது அவர்களைக் கவர்ந்தது. தடுமாறினாலும் நான் ஜெயித்துவிட்டேன். "ஸாரி சார். மன்னிச்சுங்கங்க சார்' என்று சொன்னால் "போடா முண்டம்' என்று திட்டியிருப்பார்கள். ஆங்கிலத்திற்கு மிகப்பெரிய மரியாதை இருந்த காலகட்டம் அது. "டியர் பிரதர் நமஸ்காரம். ஐம் வெரி ஃபைன் ஹியர். ஹோப் யூ வில் பி ஆல்ஸோ ஃபைன்' என்று சின்னஞ்சிறு போஸ்ட் கார்டில் நுணுக்கி ஆங்கிலத்தில்தான் அந்த அந்தண கும்பல் எழுதிக்கொண்டது. தமிழில் எழுதினால் இழிவாக இருந்தது. அந்த காலத்தில் ஓர் உண்மை இது. எனவே அந்த இடத்தை நான் கைக்கொள்ள வேண்டியிருந்தது.

அயர்ண் ராண்ட், ஆல்டக்ஸ் ஹக்ஸ்லி, ஆதர் கோஸ்லர் என்று ஒவ்வொரு படியாக அந்த ராஜேஸ்வரி லெண்டிங் லைப்ரரியில் உயர்ந்துவந்தேன். அந்த லைப்ரரியின் ஓனர் பழனி என்னுடைய நண்பரானார். இப்போதும்கூட கபாலி கோவிலில் சந்தித்தால் என் கை கோர்த்துக்கொள்வார். ""பெரிய ஆளா ஆயிட்ட பாலு. ரொம்ப பெரிய ஆளா ஆயிட்ட. உன்னை எல்லாரும் கொண்டாடுறாங்க. உன்னை மாதிரி ரைட்டரே கிடையாதுன்னு சொல்றாங்க. இது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.'' கண்ணில் ஜலம்விட்டுப் பேசினார். நான் அவரை கட்டிக்கொண்டேன். அவருடைய தயவல்லவா நான் படித்தது என்று நான் ஆலிங்கனம் செய்துகொண்டேன். காசுக்குதான் வேலை செய்தார். வாடகைக்குத்தான் புத்தகம் கொடுத்தார். ஆனாலும் இப்படி புத்தகம் கொடுக் கின்ற இடம் வேறு எங்கேயும் இல்லையே. சில ஊர்களில், கிராமங்களில் இந்தக் கடைகள் இல்லையே.

விக்கிரமன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி போன்றவர்களுடைய புத்தகங்களும் எனக்கு படிக்கக்கிடைத்தன. அரவிந்தன்போல கால்களை வெள்ளை வெளேர் என்று வைத்துக்கொள்வது எனக்கும் பைத்தியமாக இருந்தது. 

நா. பார்த்தசாரதியின் ஹீரோ என் மனதிற்குள் என்னையும் ஹீரோவாக்க முயற்சித்தான். சிறிது காலம் ஆடினான். 

அதற்குப் பிறகு அடப் போடா என்று விரட்டிவிட்டேன்.

நான் நானாக இருந்தேன். கோவிலில் கடவுள் வணக்கம், கடற்கரையில் மந்திரஜபம்,ஞாயிறு சனிக்கிழமைகளில் மத்திய நூலகம், பழனியின் ராஜேஸ்வரி லைப்ரரி, மற்ற நாட்களில் அலுவலக வேலை. ஆங்கிலம் பேசவும், எழுதவும், படிக்கவும் பலர் உதவி செய்தார்கள்.

""ஹிண்டு பேப்பர் எடுத்துக்கோ. தலையங்கம் வாசி. புரியலையா, டிக்ஷனரி யில தேடு. அல்லது எங்கிட்ட வந்து கேள்வி கேளு.'' காலையில் ஹிண்டுவின் தலையங்கம் படித்துவிட்டு அலுவலகத்திலுள்ள என் தலைவரோடு அதைப்பற்றி பேசுவதும், தெரிந்து கொள்வதும் எனக்கு உவப்பான விஷயமாக இருந்தது. சொல்லிக்கொடுக்க அவருக்குத் தெரிந்திருந்தது.

என்னை தலையில் அடித்தவருக்கு பல துன்பங்கள் நேர்ந்தன. அவர் வீடும், அவரைச் சுற்றியுள்ளோர் நசுக்கலும் அவரை அதிகம் காயப்படுத் தின. அவர் அதிகம் கத்தினார். அதிகம் கோபமானார். அவரை வேறு இடத்திற்கு மாற்றினார்கள். அது உயர்ந்த இடமல்ல. ""உன்னை அடிச்சானே, அன்னைக்கு பிடிச்சது சனி'' என்று இன்னொரு கிழவர் சொல்ல, நான் மௌனமாகக் கேட்டுக்கொண்டேன். அப்படியா என்று கிருஷ்ணரிடம் விசாரித்தேன். கிருஷ்ணர் புல்லாங்குழலை நகர்த்தவே இல்லை. சிரிப்பை நிறுத்தவே இல்லை. "உன்னைக் காப்பாற்றிவிட்டேன் அல்லவா' என்றுதான் கிருஷ்ணர் எனக்கு சொல்வதுபோல் இருந்தது.

""இருநூத்தி பதினைஞ்சு ரூபாயெல்லாம் சம்பளமே இல்ல. விலைவாசி என்னமாஉயர்ந்துண்டு வருது தெரியுமா. இருநூறு ரூபாய்க்கு வீடு கிடைக்காது. உனக்கு சம்பளம் இருநூத்தி பதினைஞ்சு ரூபாய்னா 

பதினைஞ்சு ரூபாய்ல எப்படி குடித்தனம் செய்வ. இப்ப பேங்க்ல சேந்தா நானூத்தி ஐம்பது ரூபா.''

""எவ்வளவு?''

""நானூத்தி ஐம்பது ரூபா.''

எனக்கு தலை சுற்றியது. உண்மை யாகவே சுழன்றது.

""அமெரிக்கன் பேங்ல சேந்துட்டான்னு வைச்சுக்கோ, எடுத்தவுடனே அறுநூறு ரூபாய்.'' உடம்பு நடுங்கியது. அறுநூறு ரூபாய். ""டை கட்டிட்டுதான் ஆஃபிஸ்க்கு வரணும். ஷு போட்டுண்டுதான் உள்ளே வரணும். செருப்பு போட்டுண்டா உள்ளே விடமாட்டான். அங்க சென்ட் அலவன்ஸ் உண்டுய்யா. எல்லாரும் வாசனையா இருக்கணும். அப்பத்தான் அமெரிக்காகாரனுக்கு பிடிக்கும்.''

அப்போதெல்லாம் வங்கியில் வேலை செய்பவர்கள் பெரிய கித்தாப்பு காட்டினார்கள். ""எனக்கு ஹவுசிங் லோன் கிடைக்கறது. ஒரு லட்சம் வரைக்கும் ஹவுசிங் லோன் தர்ரான். நங்கநல்லூர் ஸ்டேஷன் பக்கத்திலேயே வீடு வாங்கிப் போட்டிருக் கேன்.'' சுற்றியுள்ளோர் பலர் பேயாய் முன்னேறினார்கள். ""நான் ஒரு ரூபாய் லோன் போட்டேன்டா. எங்க அப்பா ஐம்பதாயிரம் கொடுத்தார். மாமனார் இருபத்தைந்தாயிரம் கொடுத்தார். பக்காவா ஒன்னேமுக்கா ரூபா செலவாயிடுத்து. கிரகப் பிரவேசம் செய்யணும். பத்தாயிரம் ரூபா வேணும். என்ன பன்றதுன்னு தெரியாம முழிச்சுன்டு இருக்கேன்.'' எல்லாருக்கும் காசு கவலை இருந்தது. பி.ஏ. படித்திருக்கலாமோ. காசு சம்பாதிக்க பேயாய் அலைகின்ற ஜனங்களுக்கு நடுவே என் குதிரை சிக்கித்தவித்தது. கடவுள் வழிபாடும், மந்திரமும், ஆங்கில அறிவும், இருநூற்று சொச்ச ரூபாய் சம்பளமும் மேலே கொண்டுபோய்விடுமா. இல்லை, கவிழ்த்தும் விடும். கட்டுக்கடங்காத காமம் கெட்டுப்போக வைத்தது. இதை நான் இங்கே விவரித்து எழுத விரும்பவில்லை. எழுதினால் "அட, இது தவறே இல்லை' என்று படிக்கின்ற இளைஞர்களுக்கு வந்துவிடக் கூடும். ஆனால் இதை கதையாக எழுதினேன். அப்படி எழுதப் பட்டபோதும் அதை மிருதுவாக ஒருவர் கண்டித்தார். அவர் "குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை. ""உங்களுக்கு நல்லா எழுத வருது. அதனால் கெட்ட விஷயத்தை உத்தமமா எழுதிடாதீங்க. அது தவறு. இதே குமுதத்தில் வேறு ஒருவர் இம்மாதிரியான தவறான உறவு களை சித்தரித்து எழுதறார். அவருக்கு எழுத வரல. சுமாராதான் எழுதறாரு. ஆனா அந்த மேட்டரை பலபேர் படிச்சு சந்தோஷமாறாங்க. 

எங்களுக்கு வாசகர்கள் அதிகமானாங்க. ஆனா நீங்க எழுதுனா இது உத்தமமான விஷயம்னு போயிடும். அதனால நீங்க தவறான விஷயங்களை எழுதக்கூடாது. இன்னொன்னும் சொல்றேன். எந்த தவறும் செய்யக்கூடாது. செய்தவரை போதும்.'' ஒரு தகப்பனைப்போல "குமுதம்' ஆசிரியர் என்னோடு பேசினார். எனக்கு கண்ணில் நீர் பொங்கி கன்னம்வழிந்தது.

கதை எழுதப் பழகிக்கொண்டேன். கவிதை எழுத என்ன செய்யவேண்டும்? கவிதைகள் படிக்கவேண்டும். மறுபடியும் எனக்குப் பிடித்த வேலை. நாலாயிர திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்றவை என் தாயாரின் உதவியோடு படித்தேன். "ஓருயிர் ஆயினும் சேரி வாரார். சேரி வரினும் ஆக முயங்கார்' என்பதை மனனம் செய்தேன். "உறங்குகின்ற கும்பகர்ண உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்றது இன்று காண் எழுந்திராய் எழுந்திராய்.' இம்மாதிரி பல நூறு கவிதைகள் என்னுள் பதிந்தன. தமிழினுடைய ஓசை நயம் காதுகளிலும் மனதிலும் நிறைந்து கிடந்தது. "அரியானை அந்தணர் தம் சிந்தை யானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனை.' அர்த்தம் புரியாது படித்தாலும் பிறகு அர்த்தம் புரிந்தபோது திகைப்பு வந்தது. பாடல்களும் கடவுள் நம்பிக்கையும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு நன்றாக வளர்ந்தன.

திமிரினாலும் நான் தவறு செய்தேன். 

அக்கம்பக்க வீடு காறித்துப்பிற்று. என் வீடு பயந்தது. இடம்பெயர்ந்தது. சித்தி வந்து என்னுடைய அலமாரியைப் பார்த்து அதிலுள்ள புத்தகங்களைப் படித்து வியந்து, ""எல்லாம் படிச்சு என்ன பயன்? சாக்கடையில விழுந்துட்டியே. அவ சண்டாளி. மகாபாவி. உன்னை மாதிரி ஏமாந்த சோணகிரியை வளைச்சுப்போட்டு மிதிச்சுட்டா'' என்று எதிர்பக்கம் இரைந்தார்கள். ஆனால் என் தவறு எனக் குத் தெரிந்தது. உறுதியாக இருக்கமுடியாத வேதனை புரிந்தது. என்ன தவறு, என்ன பிசகு, தொடர்ந்து எப்படி பயணிப்பது- நான் தீவிரமாக யோசித்தேன்.

(தொடரும்)


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name *:
Email Id *:
Left:  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500):
கருத்துக்கள்(4)
Name:balaDate & Time:5/20/2015 3:35:41 PM
-----------------------------------------------------------------------------------------------------
நக்கீரன் ஆசிரியருக்கு நன்றி இது ஒரு உண்மையின் தரிசனம்
-----------------------------------------------------------------------------------------------------
Name:ponnivalavan thiruvengaduDate & Time:5/14/2015 6:45:56 PM
-----------------------------------------------------------------------------------------------------
எண்களின் வீரமாமுனிவர்
-----------------------------------------------------------------------------------------------------
Name:ponnivalavan.sDate & Time:5/14/2015 6:45:56 PM
-----------------------------------------------------------------------------------------------------
சிவா சிவா
-----------------------------------------------------------------------------------------------------
Name:shivaDate & Time:5/14/2015 10:53:42 AM
-----------------------------------------------------------------------------------------------------
அற்புதம்,அன்று நடந்ததை இன்று நம் கண் முன்னே திரையிட்டு காட்டுவதில் வல்லவர் ஐயா அவர்கள்,ஒரு சில பகுதிகள் என்னையே நான் பார்ப்பது போல் உள்ளது,எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு. நக்கீரனுக்கு நன்றிகள் பல உரித்தாகுக...
-----------------------------------------------------------------------------------------------------